அதிகாலை வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை; போராடி குழந்தை மற்றும் கணவரை காப்பாற்றிய பெண்!

மும்பை, கோரேகாவ் ஆரே காலனியில் வனப்பகுதி இருக்கிறது. இதில் அதிக அளவில் சிறுத்தைகள் இருக்கின்றன. அது தவிர மும்பை புறநகர் பகுதிகளிலும் சிறுத்தைகளின் நடமாட்டம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. மும்பை புறநகர் பகுதியான கல்யாண் மற்றும் அம்பர்நாத் ஹாஜி மலாங் மலைப்பகுதியிலும் சிறுத்தைகள் காணப்படுகின்றன. இச்சிறுத்தைகள் அடிக்கடி பொதுமக்களின் குடியிருப்பு பகுதிக்கு வந்து கால்நடைகளை பிடித்துச் செல்வதுண்டு.

மும்பை, ஹாஜிமலாங்வாடி கிராமத்தில் வசிப்பவர் சாகுபாய். இவர் தன் குழந்தை மற்றும் கணவருடன் குடிசையில் வசித்து வருகிறார். வீட்டிற்கு கதவு கூட கிடையாது.

மாதிரிப்படம்

இரவில் மூன்று பேரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த போது திடீரென வீட்டிற்குள் சிறுத்தை ஒன்று புகுந்துவிட்டது.

இது குறித்து சாகுபாய் கூறுகையில், `அதிகாலை 2 மணிக்கு ஏதோ சத்தம் கேட்டதால் எழுந்தேன். அந்நேரம் ஒரு சிறுத்தை என் குழந்தையை தூக்குவதற்காக வந்தது. உடனே சிறுத்தையிடம் இருந்து பாதுகாக்க குழந்தையை தூக்கிக்கொண்டு ஒரு சுவருக்கு பின்புறம் சென்றுவிட்டேன். சிறுத்தை, உறங்கிக்கொண்டிருந்த என் கணவரின் முகத்தை கடித்து இழுத்தது. உடனே அருகில் கிடந்த கம்பை எடுத்து சிறுத்தையை அடிக்க ஆரம்பித்தேன். சிறுத்தை அங்கிருந்து நகர்ந்தது. நாங்கள் அருகில் இருந்த என் சகோதரர் வீட்டிற்கு சென்று தங்கிக்கொண்டோம். உடனே தனியார் வாகனத்தை ஏற்பாடு செய்து என் கணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பண வசதி இல்லை. காலையில்தான் உல்லாஸ் நகர் மருத்துவமனைக்குச் சென்றோம்’ என்று தெரிவித்தார்.

இது குறித்து அப்பகுதி மக்கள், `இதற்கு முன்பு சிறுத்தை கால்நடைகளை தூக்கிச்சென்று இருக்கிறது. ஆனால் இப்போதுதான் மனிதர்களை தாக்கி இருக்கிறது’ என்று தெரிவித்தனர். சமீபத்தில் இந்த பகுதி வழியாக சிறுத்தை ஒன்று அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்ற போது 6 பேரை தாக்கியதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/hjaIXUw

Post a Comment

0 Comments