மும்பை: 15 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கேங்ஸ்டர்... பிலிப்பைன்ஸில் கைதாகி இந்தியாவுக்கு நாடு கடத்தல்!

மும்பை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பில்டர்கள், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வந்த சுரேஷ் புஜாரி கடந்த 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். அவர் மீது மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் 23-க்கும் அதிகமான வழக்குகள் இருக்கிறது. 2017,18-ம் ஆண்டுகளில் அவரை கைது செய்ய சர்வதேச அளவில் ரெட் அலர்ட் நோட்டீஸ் விடப்பட்டு இருந்தது. சமீபத்தில் சுரேஷ் புஜாரி பிலிப்பைன்ஸ் நாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் பிலிப்பைன்ஸ் நாட்டு போலீஸார் புஜாரியை கைது செய்தனர். புஜாரியை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர சிபிஐ தேவையான நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து புஜாரி இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது சிபிஐ அதிகாரிகள் புஜாரியை கைது செய்து தங்களது கட்டுப்பாட்டில் எடுத்தனர். விசாரணைக்கு பிறகு அவரை மும்பை போலீஸாரிடம் ஒப்படைக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.

கைது

மும்பையில் இருந்து தனிப்படை போலீஸார் ஏற்கனவே புஜாரியை தங்களது கட்டுப்பாட்டில் எடுக்க டெல்லி சென்றுள்ளனர். சுரேஷ் புஜாரி ஆரம்பத்தில் ரவி புஜாரி, சோட்டாராஜனிடம் வேலை பார்த்து வந்தார். 2007-ம் ஆண்டு ரவி புஜாரியிடமிருந்து தனியாக பிரிந்து தனக்கென தனிக்கூட்டத்தை உருவாக்கிக்கொண்டு கிரிமினல் வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து கொண்டு மும்பையில் தனது ஆட்கள் மூலம் மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடதக்கது.



from தேசிய செய்திகள்

Post a Comment

0 Comments