காதலனின் பெற்றோர் சரமாரி புகார் - தற்கொலை செய்து கொண்ட நடிகை துனிஷாவின் தாயார் திடீர் மாயம்?!

மும்பை வசாய் பகுதியில் உள்ள காமன் ஸ்டூடியோவில் டிவி நடிகை துனிஷா சர்மா படப்பிடிப்பின் இடைவெளியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த மாதம் 24-ம் தேதி இச்சம்பவம் நடந்தது. தற்கொலைக்கு தூண்டியதாக அவரின் காதலன் ஷீசன் கான் கைது செய்யப்பட்டுள்ளார். ஷீசன் கான் நடிகை துனிஷாவுடனான நட்பை துண்டித்துக் கொண்டதால்தான் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து வசாய் வாலிவ் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஷீசன் பெற்றோர் இரண்டு நாள்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், `தற்கொலைக்கு தங்களது மகன் காரணம் கிடையாது’ என்றும், `துனிஷாவின் தாயார் வனிதா சர்மாதான் காரணம்’ என்றும் குற்றம்சாட்டினர். துனிஷாவின் தாயார், அவரின் மகளை பணத்திற்காக நடிக்கும்படி கட்டாயப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டினர்.

இது குறித்து வனிதா சர்மாவிடம் வாக்குமூலம் வாங்குவதற்காக அவரின் வீட்டிற்கு போலீஸார் சென்றனர். ஆனால் அவரின் வீடு பூட்டிக்கிடந்தது. அவர் முந்தைய நாளே தனது வீட்டில் இருந்த பொருள்களையெல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பிச்சென்று இருந்தார்.

லாரியில் அனைத்து பொருள்களையும் எடுத்துக்கொண்டு சென்றதாக வனிதா வசிக்கும் கட்டட வாட்ச்மென் தெரிவித்தார். இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஸ்ரீலட்சுமி போர்கர் இது குறித்து கூறுகையில், ``வனிதாவிடம் வாக்குமூலம் வாங்குவதற்காக நாங்கள் சென்றோம். ஆனால் அவரின் வீடு பூட்டப்பட்டு இருந்தது. அதோடு வீடே காலி செய்யப்பட்டு இருக்கிறது. வனிதாவின் மொபைல் போனும் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது. சண்டிகரில் தனது மகளின் ஆத்ம சாந்திக்காக பூஜை செய்ய வனிதா திட்டமிட்டு இருக்கிறார். அவர் அங்கு சென்று இருக்கலாம் என்று நினைக்கிறோம். அவரின் வாக்குமூலம் இவ்வழக்கில் மிகவும் முக்கியம் ஆகும். எனவே அவரை தேடிக்கண்டுபிடிக்க எங்களது தனிப்படை சண்டிகர் செல்ல இருக்கிறது” என்று தெரிவித்தார்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், `துனிஷா தனது காதலன் ஷீசன் குடும்பத்தோடு மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். ஷீசன் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் அனைத்தையும் தெரிவித்துள்ளார். துனிஷா மேற்கொண்டு நடிக்க விரும்பியதில்லை. ஆனால் அவரின் தாயார் தொடர்ந்து நடிக்கும்படி கட்டாயப்படுத்தினார். இதனால் தாய் மகள் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. தனது தாயாரின் செயலால் துனிஷா மிகவும் விரக்தியில் இருந்தார். அவரின் தாயாரிடமிருந்து துனிஷாவுக்கு அன்பு கிடைக்கவில்லை. ஆனால் ஷீசன் குடும்பம் துனிஷாவிற்கு அனைத்தையும் கொடுத்து அவரின் கனவுகளையும் நிறைவேற்றியது. ஷீசன் துனிஷாவிற்கு இரண்டு நாய்களையும் பரிசாக கொடுத்துள்ளார்’ என்று தெரிய வந்துள்ளது.

இத்தகவல்களை ஷீசன் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். துனிஷா தற்கொலைக்கு முன்பு தனது காதலனுடன் பிரேக் அப் ஆனது குறித்து அலி என்பவரை சந்தித்து தெரிவித்துள்ளார். அவரையும் போலீஸார் அழைத்து வாக்குமூலம் வாங்கி இருக்கின்றனர். அதோடு ஷீசன் வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்த பெண்ணையும் அழைத்து வாக்குமூலம் வாங்கி இருக்கின்றனர். இரண்டு பேரும் வாட்ஸ்அப் சாட்டிங்கை டெலிட் செய்துவிட்டனர். இதனால் அவர்களது போன் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஷீசன் ஜாமீன் கோரி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதோடு ஷீசன் டிவி சீரியஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதால் அவரின் முடியை வெட்ட வேண்டாம் என்று கோர்ட்டில் ஷீசன் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனை கோர்ட் ஏற்றுக்கொண்டு இது தொடர்பாக சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு இருக்கிறது. துனிஷாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒருவகையான அதிர்ச்சி தொடர்பான நோய் இருந்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதற்காக சமீபத்தில் கூட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/EvXp4kH

Post a Comment

0 Comments