கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்தவர் ரஷ்மி ராஜ் (33). இவர் கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 29-ம் தேதி கோட்டயம் சங்கராந்தியில் உள்ள ஓட்டலில் (மலப்புறம் குழிமந்தி ஃபேமிலி ரெஸ்டாரன்ட்) அல்ஃபாமா சிக்கன் மற்றும் குழிமந்தி (அனலில் சமைக்கப்படும் இறைச்சி) சாப்பிட்டு உள்ளார். சாப்பிட்ட ஒரு மணி நேரத்திலேயே அவருக்கு வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரது உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து, கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு வென்டிலேட்டரில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி கடந்த 2-ம் தேதி இரவு ரஷ்மிராஜ் மரணமடைந்தார். உள் உறுப்புகளில் கிருமித்தொற்று ஏற்பட்டதே மரணத்துக்குக் காரணம் என கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, காந்திநகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹோட்டலில் சாப்பிட்ட பிறகுதான் ரஷ்மி ராஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவரின் தந்தை சந்திரன் கூறியுள்ளார். இதே ஹோட்டலில் சாப்பிட்ட மேலும் 20 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஹோட்டலை மூடி சீல் வைத்தனர்.
கோட்டயம் நகராட்சி சுகாதாரத்துறை சார்பில் கடந்த மாதம் இந்த ஹோட்டலை ஆய்வு செய்து பூட்டியுள்ளனர். இந்த நிலையில் அந்த ஹோட்டலில் சாப்பிட்ட நர்ஸ் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சி.பி.எம் கட்சியின் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எஃஒ.ஐ-யைச் சேர்ந்தவர்கள் சீல் வைக்கப்பட்ட ஹோட்டலை அடித்து நொறுக்கினர். ஹோட்டலின் முன்பு வைக்கப்பட்டிருந்த அலங்கார பூச்செடிகள், கண்காணிப்பு கேமராக்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹோட்டலில் சாப்பிட்ட நர்ஸ் மரணமடைந்ததை தொடர்ந்து கேரளாவில் உள்ள ஹோட்டல்களில் ஆய்வு நடத்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று 429 ஹோட்டல்களில் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டது. சுகாதாரமாக இல்லாமல் இருந்த 22 ஹோட்டல்கள், மற்றும் லைசென்ஸ் இல்லாமல் இயங்கிய 21 ஹோட்டல்கள் என மொத்தம் 43 ஹோட்டல்கள் சீல் வைக்கப்பட்டன. மேலும், 138 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 44 சாம்பிள்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜின் அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/qI61pgM
0 Comments