மும்பை: 80 ஆண்டுப் பழைமையான மனீஷ் லஞ்ச் ஹோம் மூடப்படும் அபாயம்; கட்டட உரிமையாளர் நோட்டீஸ்!

மும்பையில் மாட்டுங்கா, சயான், செம்பூரில் ’மனீஷ் லஞ்ச் ஹோம்’ செயல்பட்டுவருகிறது. நாடு சுதந்திரம் அடையும் முன்பு தொடங்கப்பட்ட இந்த ஹோட்டல் தற்போது சுப்ரமணி நாராயணசாமி என்ற தமிழரால் நடத்தப்பட்டுவருகிறது.

மட்டுங்காவில் பூ மார்கெட் அருகில் இருந்த மனீஷ் லஞ்ச் ஹோம் ஏற்கெனவே மூடப்பட்டு, செம்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டது. மாட்டுங்காவில் தமிழர்களின் அடையாளமாக மனீஷ் லஞ்ச் ஹோம் இருந்தது. தற்போது மாட்டுங்காவில் ரூயா கல்லூரி அருகில் மட்டும் இந்த ஹோட்டல் செயல்பட்டுவருகிறது. 1937-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஹோட்டலில் தென்னிந்திய உணவுகள் மற்றும் பாரம்பரிய பில்ட்டர் காபி பிரபலமாகும். ரூயா கல்லூரி, போதார் கல்லூரி மற்றும் மாட்டுங்கா ஜிம்கானாவிற்குப் பயிற்சிக்கு வருபவர்கள் இந்த ஹோட்டலின் பிரதான வாடிக்கையாளர்கள் ஆவர். இந்த அளவுக்கு பாரம்பரியம் மிக்க ஹோட்டலுக்கு இப்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்த ஹோட்டலை காலி செய்யும்படி திடீரென கட்டட உரிமையாளர் லலித் குப்தா நோட்டீஸ் கொடுத்துள்ளார். அதுவும் இம்மாதம் 31-ம் தேதிக்குள் காலி செய்யவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ஹோட்டலை நிர்வகிக்கும் ராஜாமணி கூறுகையில், ”ஹோட்டலை காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இருக்கிறது. சுதந்திரத்திற்கு முன்பு என் தாத்தா இந்த ஹோட்டலை தொடங்கினார். 85 ஆண்டுகளாக இந்த ஹோட்டலை நடத்திவருகிறோம். தரமான தென்னிந்திய உணவு மற்றும் பில்ட்டர் காபி விற்பனை மூலம் எங்களுக்கெனத் தனி மரியாதையை ஏற்படுத்தியிருக்கிறோம். வாடகையை நாங்கள் மிகவும் சரியான நேரத்தில் செலுத்திவருகிறோம். மறைந்துபோன என் சகோதரர் நாராயண சாமி கட்டட உரிமையாளருடன் நல்ல நட்பு வைத்திருந்தார். பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்று நம்புகிறோம். அது முடியாத பட்சத்தில் சட்டபூர்வ நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

சுதந்திரப்போராட்டத்துக்கு முன்பு சுதந்திரப்போராட்டத் தியாகிகள் பலர் அருகில் உள்ள மைதானத்தில் போராட்டம் நடத்திவிட்டுத் திரும்பும் போது இந்தச் சிறிய ஹோட்டலில் அமர்ந்து பேசுவது வழக்கம். அந்த அளவுக்குப் பழைமையான ஹோட்டலைக் கட்டட உரிமையாளர் காலி செய்யச்சொல்லியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆரம்பத்தில் ஹோட்டலுக்கு எதிரில் உள்ள சாலையோரம் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு அவர்களின் வாகனங்களுக்கே சென்று உணவுப்பொருள்களை சப்ளை செய்து வந்தனர். ஆனால் ஹோட்டல் இருக்கும் கட்டட உரிமையாளர் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வாகனங்களில் சாப்பாடு சப்ளை செய்யப்படுவது நிறுத்தப்பட்டது.

மனீஷ் லஞ்ச் ஹோம்

மாட்டுங்காவில் பெரும்பாலான கட்டடங்கள் இடிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மனீஷ் லஞ்ச் ஹோம் இருக்கும் கட்டடமும் மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவேதான் ஹோட்டலை காலி செய்யும்படி ஹோட்டலுக்கு நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஹோட்டல் வழக்கறிஞர் கூறுகையில், கட்டட உரிமையாளருக்குத் தக்க பதில் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஏற்கெனவே மாட்டுங்காவில் பூமார்க்கெட் அருகில் இருந்த மனீஷ் லஞ்ச் ஹோம் மூடப்பட்டு அந்தக் கட்டடம் மேம்படுத்தப்பட்டது. ஆனால் ஹோட்டலுக்கு பில்டர் தரப்பில் மாற்று இடம் கொடுக்கப்படவில்லை. இதையடுத்து தற்போது அந்த ஹோட்டல் செம்பூருக்கு மாற்றப்பட்டுவிட்டது. தற்போது ரூயா கல்லூரி அருகில் இருக்கும் மனீஷ் லஞ்ச் ஹோமிற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மாட்டுங்காவில் ஆரம்பத்தில் தமிழர்கள் அதிகம் வசித்தனர். ஆனால் கட்டடங்களை இடித்துவிட்டுப் புதிய கட்டடங்கள் கட்டப்பட்ட போது அதிகமான தமிழர்கள் மும்பையின் புறநகர்ப் பகுதிக்குச் சென்றுவிட்டனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/J2C7eBX

Post a Comment

0 Comments