கர்நாடக மாநிலத்தின், குளிர்கால கூட்டத்தொடர் ஆண்டுதோறும், பெலகாவில் உள்ள ஸ்வர்ண சவுதாவில் நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டுக்கான குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. பெங்களூரில் வாக்காளர்கள் தகவல் திருட்டு, வாக்காளர்கள் பெயர் நீக்க விவகாரம், பணிகளுக்கு 40 சதவிகிதம் கமிஷன் உட்பட பல பிரச்னைகளை முன்வைத்து, சட்டப்பேரவையில் கூட்டத்தொடரை புறக்கணிக்க காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், சட்டப்பேரவைக்குள், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் படேல், ஜகத்ஜோதி பசவன்னா உட்பட ஏழு தலைவர்களின் படங்களை, பா.ஜ.க முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார்.
இதில், சாவர்க்கர் படமும் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து, முன்னாள் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா, மாநிலத் தலைவர் சிவக்குமார் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர், சாவர்க்கர் படம் வைக்கப்பட்டதற்கு கடும் கண்டனத்தைப் பதிவுசெய்து, சட்டப்பேரவைக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்தப் போராட்டம் தொடர்பாக சித்தராமையா நிருபர்களிடம், ‘‘பா.ஜ.க-வினர் கர்நாடகம் முழுவதிலும் இந்துத்துவத்தை கட்டவிழ்க்கின்றனர். இந்த நிலையில், இந்துத்துவவாதியான சாவர்க்கர் படத்தை சட்டப்பேரவைக்கு உள்ளே வைத்திருக்கின்றனர். காந்தியின் கொலையில் தொடர்புடைய, சர்ச்சைக்குரிய நபரான சாவர்க்கர் படத்தை வைக்க எந்தத்தேவையும் இல்லை.
எதிர்க்கட்சியான எங்களிடம் படங்கள் வைப்பது குறித்து எந்தத்தகவலும் தெரிவிக்கவில்லை. பா.ஜ.க-வின் 40 சதவிகிதம் கமிஷன் ஊழல், வளர்ச்சியற்ற ஆட்சி குறித்து நாங்கள் கேள்வி எழுப்புவோம் என்பதற்காக, சாவர்க்கர் படத்தை வைத்து, பிரச்னைகளை திசைதிருப்ப முயல்கின்றனர்'' என்றார்.
கர்நாடக காங்கிரஸ் மாநிலத் தலைவர் சிவக்குமார் நிருபர்களிடம், ``கர்நாடகா மற்றும் இந்திய அரசியலுக்கும் சாவர்க்கருக்கும் எந்தத்தொடர்புமில்லை. இப்படியிருக்கையில், சட்டபேரவைக்குள் அவரின் படத்தை வைப்பதன் நோக்கம் என்ன? அப்படியானால், சட்டப்பேரவைக்குள் ஜவஹர்லால் நேரு, சமூக சீர்திருத்தவாதி நாராயணகுரு, கனகதாசா உள்ளிட்ட தலைவர்களின் படங்களையும் வைக்க வேண்டும்'' என கண்டனம் தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், டெல்லியில் நிருபர்களிடம் பேசிய பா.ஜ.க மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, ‘‘கருத்தியல் ரீதியில் வேறுபாடுகள் இருந்தாலும், சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்; அவரின் படத்தை வைத்ததற்கு போராட்டம் நடத்துகின்றனர். சித்தராமையாவிடம் கேளுங்கள், சட்டப்பேரவைக்குள் தாவூத் இப்ராஹிம் போட்டோவை வைக்க வேண்டுமென சொல்வார். சுதந்திர போராட்டங்களில் தங்களின் பங்கு குறித்துப் பேசிய காங்கிரஸ் இப்போதில்லை. இப்போது இருப்பது டூப்ளிகேட் காங்கிரஸ்'' என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/ZSEitTD
0 Comments