நாகர்கோவில், தேனி மாவட்ட பகுதிகளில் கேரளா அரசு, சுமார் 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை கையகப்படுத்தியிருப்பதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "திறமையாகச் சுரண்டும் கம்யூனிஸ்ட் ஆட்சியிடம், மண்டியிடும் திறனற்ற அரசு தி.மு.க. கேரளா அரசு டிஜிட்டல் நில அளவீட்டு திட்டம் `என்ட்டே பூமி' என்ற பெயரில் தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் நில அளவீடு செய்து, தங்களுடைய கேரளா மாநில எல்லைகளை தமிழக எல்லைக்குள் விஸ்தரித்து வருவதை, தமிழக அரசு அதிகாரிகளும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.
கேரள அரசின் அறிவிப்பின்படி, புதிய கணக்கெடுப்பு வரைபடம் முடிவடைந்தவுடன், ஒவ்வொரு நபரின் நிலத்தின் அதிகாரபூர்வ பதிவு, கேரள எல்லைக்குள் சென்று விடும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. வயநாடு, காசர்கோடு, ஊட்டி, நாகர்கோவில், தென்காசி, பொள்ளாச்சி, கொடைக்கானல், குமுளி உள்ளிட்ட 13 முக்கிய எல்லை நிர்ணய மண்டலங்களில் தீவிரமாக கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தத் திட்டம் 1-11-2022 அன்று தேனி மாவட்ட எல்லையில் தொடங்கப்பட்ட நிலையில், 7-11-2022 அன்றுதான், ஆழப்புழா மாவட்ட நிர்வாகத்திடமிருந்து பெறப்பட்ட கடிதம் மூலம், தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு, இந்தத் தகவல் உறுதியாகத் தெரியவருகிறது.
இந்தச் செய்தியை மறுத்து, 10-11-2022 அன்று, தமிழ்நாடு வருவாய்துறை செயலாளர் குமார் ஜெயந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பில், `கேரள எல்லையில் டிஜிட்டல் முறையில் நில அளவை எதுவும் செய்யப்படவில்லை' என்று கூறியிருக்கிறார். ஆனால் எல்லைப் பகுதியில் வசிக்கும் விவசாயிகள் நில அளவை நடப்பதை உறுதி செய்திருக்கின்றனர். 17-11-2022 அன்று நாகர்கோவில், தேனி மாவட்ட பகுதியிலும், கேரளா அரசு, தமிழக அரசைக் கலந்தாலோசிக்காமல், சுமார் 80 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தை கையகப்படுத்தியிருப்பதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
இடுக்கி, தேனி எல்லையில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க, மங்களதேவி கண்ணகி திருக்கோயிலின் நிர்வாகத்தின் தமிழக உரிமைகளில், கேரள அரசு ஏற்கெனவே தலையிடுகிறது. கேரள அரசின் தலையீட்டை தமிழக அரசு இதுவரை தடுக்கவில்லை. தமிழ் மகள் கண்ணகி திருக்கோயிலை பாதுகாக்க தமிழக அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தன்னுடைய தேசிய பதவிகளுக்கான கனவுகளுக்காக, தமிழக முதல்வர் கண்மூடிக் கொண்டு கேரள அரசின் அத்துமீறல்களை அனுமதிக்கிறார். பினராயி விஜயனின் நட்பை புதுப்பித்துக் கொண்டு, மலையாளத்திலே பேசி, தமிழக நிலங்களை, மக்கள் நலன்களை காவு கொடுத்து, பதவி ஆசைக்காக மௌனம் காக்கிறார்.
கேரள அரசு நில அபகரிப்பு செய்வதை கண்டுகொள்ளாமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கேரளத்திலிருந்து கோழிக்கழிவுகளையும், மாமிச கழிவுகளையும், மருத்துவ கழிவுகளையும், கொண்டு வந்து தமிழக எல்லைகளில் கொட்டுவது; தமிழகத்தின் நீர் நிலைகளை பாழ்படுத்துவது; தமிழகத்தின் கனிம வளங்களை, ஆற்று மணல்களை, கடத்தல் மூலம் கொள்ளையடிப்பது என கேரள அரசின் தொடர் அத்துமீறல்கள், தமிழக நலன்களை பாதித்துக் கொண்டே இருக்கின்றன. தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக, தமிழக நலன்களை பலி கொடுத்த வரலாறு தி.மு.க-வுக்கு உண்டு.
ஆனால் இனியும் அதைத் தொடர தமிழக பா.ஜ.க அனுமதிக்காது. விரைவில் எல்லைப் பகுதிகளில், நானே நேரிலே சென்று ஆய்வு செய்வேன். தமிழகத்தின் ஒரு சதுர அங்குல மண்ணைக்கூட கேரள அரசு கொண்டு செல்ல தமிழக பா.ஜ.க அனுமதிக்காது.
ஆகவே தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, இது பற்றிய ஒரு வெள்ளை அறிக்கையை மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையேல், மக்கள் சக்தியுடன் இணைந்து தமிழக எல்லையை மீட்பதற்கு தமிழக பா.ஜ.க மிகப்பெரிய போராட்டத்தை நடத்த தயாராக இருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/X36SBbu
0 Comments