கர்நாடக, மகாராஷ்டிரா எல்லையில் பதற்றம்; 144 தடை உத்தரவு பிறப்பித்த போலீஸார்!

கர்நாடகாவில் இருக்கும் பெலகாவி எனப்படும் பெல்காமை தங்களது மாநிலத்துக்கு ஒதுக்கவேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு கோரி வருகிறது. ஆனால் கர்நாடகாவின் எந்த பகுதியையும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கர்நாடகா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இது தொடர்பாக சமீபத்தில் இரு மாநிலங்களிடையே மோதல் ஏற்பட்டது. எல்லையில் வன்முறை நடந்தது. இதையடுத்து இரு மாநில முதல்வர்களும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இது தொடர்பாக சந்தித்துப் பேசினர். ஏற்கெனவே பெல்காம் பிரச்னை எழுந்தபோது கர்நாடகா அரசு பெல்காமை கர்நாடகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவித்து, அங்கும் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவித்தது. ஆனால் பிரச்னை வரும்போது மட்டும் பெல்காமில் கர்நாடகா அரசு சட்டமன்ற கூட்டத்தை கூட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறது. இன்று மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவின் குளிர்கால சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது.

பெல்காம் சட்டமன்றம்

கர்நாடகா அரசு இந்த முறை சட்டமன்றக்கூட்டத்தொடர் பெல்காமில் நடைபெறும் என்று அறிவித்தது. 10 நாள்கள் இந்தக் கூட்டத்தொடர் நடைபெறும். இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹசன் முஸ்ரிப், சிவசேனா கோலாப்பூர் தலைவர் விஜய் தேவானே ஆகியோர் தலைமையில் இரு கட்சிகளையும் சேர்ந்த 300-க்கும் அதிகமானோர் பெல்காமுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை கர்நாடகா போலீஸார் உள்ளே நுழைய விடாமல் பிடித்து நிறுத்தி மீண்டும் மகாராஷ்டிராவுக்குள் அனுப்பி வைத்தனர். சிலர் மகாராஷ்டிராவிற்குளேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் இரு மாநில எல்லையில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. பாதுகாப்புப்பணியில் போலீஸார் நூற்றுக்கணக்கானோர் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

பெல்காம் எல்லை

பெல்காமை மகாராஷ்டிராவுடன் இணைக்கவேண்டும் என்று கோரி கடந்த 50 ஆண்டுகளாகப் போராடி வரும் மத்யவர்த்தி மகாராஷ்டிரா எகிகிரன் சமிதியைச் சேர்ந்தவர்கள் பெல்காம் சட்டமன்றக்கூட்டத்தின்போது மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே கூறுகையில், ``இந்தப் பிரச்னைக்கு மத்திய அரசுதான் காரணம் ஆகும். மகாராஷ்டிராவைப் பிரிக்க பிரதமர் மோடி விரும்புகிறார். இரு மாநில முதல்வர்களும் அமித் ஷாவை சந்தித்துப் பேசிய பிறகு ஏன் மகாராஷ்டிரா தலைவர்களை தடுத்து நிறுத்தவேண்டும்'' என்று கேள்வி எழுப்பினார்.

பெல்காமில் 60-க்கும் அதிகமான அமைப்புகள் போராட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தன. இதனால் பாதுகாப்புக்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். இதையடுத்து, காவல்துறையினர் 144 தடை உத்தரவை பிறப்பித்திருக்கின்றனர். மகாராஷ்டிரா எம்.பி தைரியசீல் மானேவும் இன்று பெல்காம் செல்லப்போவதாக தெரிவித்திருக்கிறார். மகாராஷ்டிராவில் இன்னும் 4 மாதங்களில் தேர்தல் நடக்கவிருப்பதால் இது கடைசி கூட்டத்தொடராகும்.



from தேசிய செய்திகள் https://ift.tt/Bgi6rea

Post a Comment

0 Comments