கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்தவர் அன்சர் (40). இவர் கடந்த 14-ம் தேதி இரவு ஈரோடு மாவட்டம், பெருந்துறை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்தப் புகாரில், ``நான் ஒரு ஜவுளி வியாபாரி. மொத்த விலையில் ஜவுளி வாங்குவதற்காக என் நண்பர் அபிஷேக்குடன் ரூ.29 லட்சம் ரூபாய் எடுத்துக் கொண்டு பெருந்துறைக்கு வந்தேன். ஜவுளி புரோக்கர் ஒருவர் என்னையும், நண்பர் அபிஷேக்கையும் ஜவுளி குடோனுக்கு காரில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.
பெருந்துறை, கடப்பமடை பகுதியில் உள்ள ஏரி கருப்பராயன் கோயில் அருகில் செல்லும்போது எங்களது காரை வழிமறித்து, போலீஸ் சீருடை அணிந்த 4 நபர்கள் காரை சோதனையிட வேண்டும் என்று கூறினர். காரை சோதனையிட்ட போது பணம் ரூ.29 லட்சம் இருந்ததை அவர்கள் எடுத்துக் கொண்டனர். ``இது கணக்கில் வராத பணம் போல தெரிகிறது. அதனால் நீங்கள் பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து இந்த பணம் எப்படி வந்தது என்ற கணக்கை காண்பித்துவிட்டு ஸ்டேஷனிலிருந்து உங்கள் பணத்தை திரும்ப பெற்றுச் செல்லுங்கள்” என்று கூறிவிட்டு பணத்துடன் அந்த 4 பேரும் அங்கிருந்து காரில் சென்று விட்டனர். எனவே என்னிடமிருந்து பெற்றுச் சென்ற பணம் ரூ.29 லட்சத்தை திருப்பித் தர வேண்டும்'' என்று புகாரில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினார்கள். அதில், பணத்தை எடுத்துச் சென்ற நபர்கள் பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனைச் சேர்ந்த காவலர்கள் இல்லை என்பது தெரிய வந்தது. அதன் பிறகே சீருடை அணிந்து போலீஸார் போல வந்த சிலர் தன்னை ஏமாற்றி பணம் பறித்து சென்றதை அன்சர் உணர்ந்தார்.
இதையடுத்து அன்சர் கொடுத்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் பெருந்துறை காவல் ஆய்வாளர் மசூதா பேகம் தலைமையிலான தனிப்படையும், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் அடங்கிய தனிப்பிரிவு என 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், புகாரளித்த அன்சர் தலைமறைவானார். அவருடன் வந்த ஈரோட்டைச் சேர்ந்த அபிஷேக் மட்டுமே போலீஸாரிடம் சிக்கினார். அவரிடம், தனிப்படை போலீஸார் தீவிரமாக நடத்திய விசாரணையில் அன்சர், கேரள மாநிலத்தைச் சேர்ந்த அஷ்ரப் என்பவர் மூலமாக பெருந்துறையில் இருந்து கள்ளநோட்டுகளை வாங்க முற்பட்டதும், அதற்காக அஷ்ரப்பின் ஆட்களான கேரள மாநிலம், ஆலுவா, புரயம் பகுதியைச் சேர்ந்த பஷீர் (49), கோவை, ராமநாதபுரம், ஒலம்பஸ், பாரதியார் நகரைச் சேர்ந்த ஜனார்த்தனன் (எ) சேகர் (47), பாலக்காடு, சித்திலஞ்சேரியைச் சேர்ந்த ஜலீல் (42), பாலக்காடு, கண்ணாண்டியைச் சேர்ந்த சுதீர் (52), ஊட்டி, சேரிங்கிராஸைச் சேர்ந்த மகாலட்சுமி என்கிற பிரேமா (48) ஆகியோர் ரூ. 6 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் தயார் செய்து கொடுத்ததும் தெரிய வந்தது.
ஒரிஜினல ரூபாய் நோட்டுகளான ரூ. 29 லட்சத்தை கொடுத்து கள்ளநோட்டுகளை பரிமாறிக் கொண்டிருந்த போது அந்த இடத்தில் போலீஸ் சீருடையில் அஷ்ரபின் ஆட்கள் அங்கு வந்தனர்.
போலீஸார் சீருடையில் வந்த அஷ்ரபின் ஆட்கள், அவர்கள் வைத்திருந்த ரூ. 6 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளையும், ரூ. 29 லட்சம் ஒரிஜினல் நோட்டுகளையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர்.
மேற்படி மோசடியில் சம்மந்தப்பட்ட நபர்களை தனிப்படையினர் விரைந்து செயல்பட்டு ஒரு பெண் உள்பட 5 பேரை கைது செய்தனர்.மேலும், அவர்களிடமிருந்து ரூ.24,80,000 ரொக்கத்தையும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு கார் மற்றும் ஒரு பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து பெருந்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கௌதம்கோயல் நம்மிடம் கூறியதாவது, ``அன்சரும், அபிஷேக்கும் நண்பர்கள். பெருந்துறை போலீஸ் ஸ்டேசனில் கடந்த 14-ம் தேதி புகார் கொடுத்து விட்டு அன்சர் தலைமறைவாகி விட்டார். அபிஷேக் ஈரோட்டைச் சேர்ந்தவர். அவர் மட்டுமே அடுத்தநாள் காலை பெருந்துறை போலீஸ் ஸ்டேசனுக்கு வந்தார். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பல தகவல்கள் கிடைத்தன. கள்ளநோட்டு புரோக்கரான அஷ்ரப்பை, அன்சருக்கு அபிஷேக்தான் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.பணத்தை பறித்து செல்ல திட்டமிட்ட முக்கிய குற்றவாளிகள் அஷ்ரப், பஷீர், ஜனார்த்தன் ஆகியோர் தான். ஜலீல், சுதீர், பால ஏட்டன் ஆகியோர் காவலர் சீருடையில் வந்து பணத்தை பறித்துக் கொண்டு சென்றவர்கள் ஆவர். இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், புகார் அளித்த அன்சர், அஷ்ரப், பால ஏட்டன் உள்ளிட்ட 7 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடி வருகிறோம்'' என்றார்.
விரைந்து செயல்பட்டு கள்ளநோட்டு கும்பலை கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/tU3F0cs
0 Comments