கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் பெலகாவி உட்பட சில நகரங்களை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு போராடி வருகிறது. இது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறது. இதற்காக சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு எல்லை ஒருங்கிணைப்புக் கமிட்டியை மாற்றியமைத்தது. இதனால் மீண்டும் இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
மகாராஷ்டிரா அமைச்சர்கள் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் சம்புராஜ் தேசாய் ஆகியோர் இன்று பெலகாவி செல்வதாக அறிவித்திருந்தனர். ஆனால் அவர்கள் தற்போதைய சூழ்நிலையில் பெலகாவி வரவேண்டாம் என்றும், அப்படி வந்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கேட்டுக்கொண்டார்.
மகாராஷ்டிரா அமைச்சர்களின் வருகையை தடுக்க கன்னட அமைப்பினர் பெங்களூருவில் இருந்து 100 வாகனங்களில் வர ஆரம்பித்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து இரு அமைச்சர்களின் கர்நாடகா பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
அதேசமயம், மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் அக்கல்கோட் தாலுகாவில் இருக்கும் 10 கிராமங்கள் தங்களை கர்நாடகாவுடன் இணைக்கவேண்டும் என்று கோரி பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அதோடு தங்களை கர்நாடகாவுடன் இணைய தடையில்லா சான்று வழங்க வேண்டும் என்று கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு கொடுத்திருக்கின்றனர்.
இது குறித்து தர்சங்க என்ற கிராம பஞ்சாயத்து தலைவர் தமன்னா பாட்டீல் கூறுகையில், ``நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் சாலை உட்பட எந்த வித அடிப்படை வசதியும் இல்லாமல் எல்லையோர கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்நாடகாவில் சாலை உட்பட அனைத்து வசதிகளும் இருக்கிறது'' என்று தெரிவித்தார். ஏற்கெனவே இந்தப் பகுதியை கர்நாடகாவுடன் இணைக்க வேண்டும் என்று சமீபத்தில் கர்நாடகா முதல்வர் பொம்மை கோரிக்கை விடுத்திருந்தார்.
இது தவிர நாசிக் மாவட்டத்தில் உள்ள சுர்கானா தாலுகாவில் இருக்கும் 55 கிராம மக்கள் தங்களை அண்டை மாநிலமான குஜராத்துடன் இணைக்கவேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றனர். அதோடு இது தொடர்பாக அருகில் உள்ள குஜராத் மாநில வன்ஸ்தா தாலுகா அதிகாரிகளை சந்தித்து மனுவும் கொடுத்திருக்கின்றனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் கங்காதரன் உடனே அந்தப் பகுதிக்கு சென்று பார்வையிட்டார். உடனே தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/oErgaxV
0 Comments