கர்நாடக சட்டசபை தேர்தல் இன்னும், ஏழு மாதங்களுக்குள் நடக்கவிருக்கிறது. கங்கிரஸ், பா.ஜ.க மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சியினர், தேர்தல் பணிகளில் தற்போதே களமிறங்கியிருப்பதால், கர்நாடகா பரபரப்பு பஞ்சமில்லாமல் இருக்கிறது.
இந்த நிலையில், ‘பெங்களூரு சுற்றுப்பகுதியில், தனியார் அமைப்பை பயன்படுத்தி பா.ஜ.க –வினர் சட்ட விரோதமாக வாக்காளர்களின் தகவல்களை சேகரித்து, நேர்மையற்ற முறையில் ஆட்சியை பிடிக்க முயல்கின்றனர்,’’ என, கடந்த இரண்டு நாட்களாக காங்கிரஸ் கட்சியினர், தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றனர்.
நேற்று, 18-ம் தேதி மதியம், கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர், பெங்களூருவில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், ``சட்ட விரோதமாக வாக்காளர்களின் தகவல்களை சேகரித்தது தொடர்பாக, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, தனியார் அமைப்புடன் தொடர்பில் இருக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயணன், பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் துசார் கிரிநாத், தனியார் அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக்கூறி புகாரளித்தனர்.
அதன் பிறகு கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்கள். அப்போது, ``வாக்காளர்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவோம், ஆதார் – வாக்காளர் அட்டை இணைப்போம் எனக்கூறி, தனியார் அமைப்பினர் பெங்களூரு மாநகராட்சியில் ஆகஸ்டு மாதம் அனுமதி பெற்றிருக்கின்றனர்.
ஆனால், இந்த அமைப்பினர் உண்மையில் விழிப்புணர்வு மேற்கொள்ளவில்லை. மாறாக, வீடு வீடாக சென்று பெயர், சாதி, முகவரி, வயது, மொபைல் எண், இ – மெயில் என வாக்காளர்களின் பல தகவல்களை சேகரித்திருக்கின்றனர். தகவல் சேகரிப்பதற்காக ஆட்களை நியமித்து, அவர்களுக்கு ‘பூத் லெவல் ஆபிசர்’ என போலியான அடையாள அட்டை வழங்கி, வீடு வீடாக தகவல்கள் சேகரிக்க வைத்திருக்கின்றனர். இந்த தகவல்களை வைத்து, வாக்காளர்களை கட்சி ரீதியாக பிரித்து அவர்கள் பெயரை நீக்கவும், வேறு தொகுதிக்கு இடமாற்றவும் வாய்ப்பிருக்கிறது.
தனியார் அமைப்பின் இயக்குநர் கிருஷ்ணப்ப ரவிக்குமார் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயணன் இருவரும் நண்பர்களாக இருக்கின்றனர். இவ்வளவு பெரிய மோசடி, முதல்வர், அமைச்சர் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் உதவி இல்லாமல் நடைபெற வாய்ப்பில்லை. பா.ஜ.க, அரசு துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் உதவியுடன் அரங்கேறியிருக்கிறது.
முன்பு ‘ஆபரேஷன் தாமரை’ எனக்கூறி, எம்.எல்.ஏ–க்களை விலைக்கு வாங்கி ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க–வினர், தற்போது, ‘ஆபரேஷன் வோட்டர்’ எனத் தொடங்கி இருக்கிறது. இது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. முதல்வர் பசவராஜ் பொம்மை பதவி விலக வேண்டும். மாநில, தேசிய தேர்தல் ஆணையம் முழுமையாக விசாரித்து, அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் கர்நாடக காங்கிரஸ் மாபெரும் போராட்டத்தை நடத்தும்,’’ என்றனர் காட்டமாக.
காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறுகிறது எனக்கூறி, ஆரம்பம் முதல் காங்கிரஸ் குற்றச்சாட்டை மறுத்து வந்த முதல்வர் பசவராஜ் பொம்மை, மங்களூர் விமான நிலையத்தில் இன்று (19 –ம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், ``2014 முதல் தனியார் அமைப்புகள் சார்பில், வாக்காளர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் அமைப்பு உண்மையில் சட்ட விரோதமாக வாக்காளர்களின் தகவல்களை சேகரித்ததா, தகவல்களை தவறான வழியில் பயன்படுத்தினார்களா என, போலீஸார் மற்றும் தேர்தல் ஆணையத்தினர் விசாரித்து வருகின்றனர். விரைவில் உண்மை என்னவென்று அனைவருக்கும் தெரியப்போகிறது. மோசடி நடந்தது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.
இதனிடையே காங்கிரஸ் கட்சியினர், இந்த விவகாரம் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
from தேசிய செய்திகள் https://ift.tt/SkPtTuY
0 Comments