கர்நாடகாவில், ஓடிக்கொண்டிருந்த ஆட்டோ திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் டிரைவர் உட்பட இரண்டு பேர் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்தச் சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என்று போலீஸாரால் சந்தேகிக்கப்படுகிறது.
இன்று அதிகாலையில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில், மங்களூரு ரயில் நிலையத்தில் ஒருவர் தன்னை நகரத்தில் இறக்கிடுமாறு ஆட்டோவில் ஏறியதாகக் கூறப்படுகிறது. பின்னர் ஆட்டோ சென்றுகொண்டிருக்கையில், நாகோரி பகுதி அருகே திடீரென ஆட்டோ வெடித்து தீப்பிடித்து எரிந்திருக்கிறது. இதில் டிரைவர் உட்பட இரண்டு பேர் காயமடைந்தனர்.
சம்பவம் தொடர்பாக தகவலறிந்து அங்கு விரைந்த போலீஸார், மற்றும் மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அதையடுத்து, ஆட்டோவிலிருந்து பேட்டரிகளுடன் எரிந்த பிரஷர் குக்கரை போலீஸார் கைப்பற்றினர். இதன்காரணமாக, இதுவொரு தீவிரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பிருக்கிறது என போலீஸாரால் சந்தேகிக்கப்படுகிறது.
இது குறித்து கர்நாடக டிஜிபி பிரவீன் சூட், ``இந்த குண்டுவெடிப்பு தற்செயலானது அல்ல. ஆனால் கடுமையான சேதம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட தீவிரவாதச் செயல். இது குறித்து கர்நாடக மாநில காவல்துறையும், மத்திய ஏஜென்சிகளும் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன" என்று தெரிவித்திருக்கிறார். மேலும் கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவும், இந்த விவகாரத்தில் மத்திய புலனாய்வுக் குழுக்கள் போலீஸாருக்கு உதவுவதாகக் கூறினார்.
இந்த சம்பவத்தையடுத்து, தமிழ்நாட்டில் குறிப்பாக அனைத்து வாகன சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருக்கிறார். முக்கியமாகத் தமிழ்நாடு-கர்நாடக எல்லைப் பகுதிகள் மற்றும் மக்கள் கூட்டம் அதிகமிருக்கும் பகுதிகளளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.
from தேசிய செய்திகள் https://ift.tt/YiqReuF
0 Comments