நாட்டில் பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது கருப்பு பணத்தை மாற்ற நினைத்த பல தொழிலதிபர்களிடம் சி.பி.ஐ அதிகாரிகளாக நடித்து மிரட்டிப் பணம் பறித்த சம்பவங்கள் அதிகமாக நடந்தன. இப்போது மீண்டும் மும்பையில் அது போன்ற குற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல் உள்ளூர் தொழிலதிபர்களை அடையாளம் கண்டுகொண்டு தங்களது காரியத்தில் இறங்குகின்றனர். முதலில் ரொக்கமாக யாரிடம் அதிக பணம் இருக்கிறது என்ற விவரத்தைச் சேகரிக்கின்றனர்.
அதன் பிறகுதான் சி.பி.ஐ அதிகாரிகள் போல் ரெய்டு நடத்தி தொழிலதிபர்களிடமிருக்கும் பணத்தை பறித்துக்கொள்கின்றனர். இதில் பணத்தை இழந்த தொழிலதிபர்கள் வெளியில் சொல்லாமல் இருந்து விடுகின்றனர். போலீஸில் புகார் செய்தால் சட்டச்சிக்கல் ஏற்படும் என்று கருதி போலீஸிலும் புகார் செய்வதில்லை. இந்த நிலையில், மும்பை கோரேகாவ் பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் துணிந்து இது குறித்து போலீஸில் புகார் செய்தார்.
அவரது புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இது குறித்து இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர், ``தங்களுக்கு இருக்கும் உள்ளூர் தொடர்புகள் மூலம் யாரிடம் அதிக அளவில் பணம் இருக்கிறது என்ற விவரத்தை முதலில் இந்தக் கும்பல் பெறுகிறது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தொழிலதிபரிடம் ஒருவரை அனுப்பி அவரிடம் இருக்கும் கருப்பு பணத்தை சட்டபூர்வமான பணமாக மாற்றிக்கொள்ளும்படி கூறுவர். தொழிலதிபர் அதற்கு சம்மதிக்கும் பட்சத்தில் தொழிலதிபர் கருப்பு பணத்தைக் கொண்டு வரும் இடத்துக்கு இந்தக் கும்பல் சி.பி.ஐ அதிகாரிகள் போல் சென்று தொழிலதிபரிடமிருக்கும் பணத்தை பறித்துக்கொண்டு சென்றுவிடுவர். கோரேகாவ் தொழிலதிபரிடம் இந்தக் கும்பல் ரூ.50 லட்சத்தை மிரட்டி பறித்திருக்கிறது.
தொழிலதிபரிடம் இரண்டு பேர் அணுகி தங்களது நிறுவனத்தில் ரூ.1 கோடி முதலீடு செய்தால் ரூ.1.8 கோடியாக கிடைக்கும் என்று தெரிவித்தனர். அதனை தொழிலதிபரும் நம்பினார். இதற்காக ரூ.50 லட்சம் ஏற்பாடு செய்து தனது அலுவலகத்தில் வைத்திருந்தார். சி.பி.ஐ அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு ஒரு கும்பல் உள்ளே நுழைந்தது. அந்தக் கும்பல் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தொழிலதிபரிடமிருந்த கருப்பு பணத்தை பறிமுதல் செய்துகொண்டு தொழிலதிபரையும் காரில் ஏற்றிச்சென்றது. அவரை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டது அந்தக் கும்பல்.
இதே போன்று மற்றொரு தொழிலதிபரிடம் ரூ.1.8 கோடி கடன் வாங்கிக்கொடுப்பதாக இதே கும்பல் வாக்குறுதி கொடுத்திருக்கிறது. கடன் வாங்கிக்கொடுக்க முதலில் ரூ.5 லட்சம் கமிஷன் கொடுக்கவேண்டும் என்று கேட்டனர். அவர்கள் மீது சந்தேகமடைந்த தொழிலதிபர் தன் ஊழியர்கள் மூலம் அவர்களைப் பிடிக்க முயன்றார். அவர்களில் இரண்டு பேர் மட்டும் சிக்கினர். அவர்களை போலீஸாரிடம் ஒப்படைத்தார். போலீஸார் விசாரணை நடத்தி கிரிஷ், மங்கள், சுனில், ஜீவா, நாசிர் கான், கிஷோர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் குற்றத்தில் ஈடுபடும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பெயர்களைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்" என்று தெரிவித்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/gT2EmyM
0 Comments