உத்தவ்-க்கு அக்னிப் பரீட்சையாக மாறிய இடைத்தேர்தல்; காங்கிரஸ், சரத் பவார் ஆதரவு கைகொடுக்குமா?

மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு உத்தவ் தாக்கரே அணியும், ஏக்நாத் ஷிண்டே அணியும் தங்களது செல்வாக்கை நிரூபிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. முதற்கட்டமாக தாதர் மற்றும் பாந்த்ராவில் நாளை நடக்கும் தசரா பொதுக்கூட்டத்தில் இரு அணிகளும் தங்களது செல்வாக்கை நிரூபிக்க படாதபாடு பட்டுக்கொண்டிருக்கின்றன. இரு அணிகளும் மாநிலம் முழுவதுமிருந்து பொதுக்கூட்டத்திற்கு தொண்டர்களை அழைத்து வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அடுத்த கட்டமாக மும்பை அந்தேரி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 7-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதி சிவசேனா எம்.எல்.ஏ ரமேஷ் கடந்த மே மாதம் இறந்துபோனதால் இங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் ஏக்நாத் ஷிண்டே அணி போட்டியிட முயன்றது. ஆனால் பா.ஜ.க தொகுதியை கொடுக்க முடியாது என்று கூறிவிட்டது.

உத்தவ் தாக்கரே

இதில் உத்தவ் தாக்கரே தரப்பில் இறந்து போன எம்.எல்.ஏ-வின் மனைவி ருதுஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பா.ஜ.க தரப்பில் முன்னாள் கவுன்சிலர் முர்ஜி பட்டேல் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று மும்பை பா.ஜ.க தலைவர் ஆசிஷ் ஷெலார் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவுக்கு ஆதரவு கொடுப்போம் என்று சரத் பவார் அறிவித்திருக்கிறார். இதே போன்று மும்பை காங்கிரஸ் தலைவர் பாய் ஜக்தாப் இது குறித்து கூறுகையில், ``அந்தேரி கிழக்கு தொகுதியில் வேட்பாளரை நிறுத்தவேண்டாம் என்று சிவசேனா எங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து இரண்டு நாள்களில் முடிவு எடுக்கப்படும். இதற்கு முன்பு சிவசேனா எங்களுக்கு கோலாப்பூர் மற்றும் நாண்டெட் இடைத்தேர்தல்களில் ஆதரவு கொடுத்திருக்கிறது. நாங்கள் இன்னும் மகாவிகாஷ் அகாடியில்தான் இருக்கிறோம். எனவே சிவசேனா வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் மனநிலையில்தான் இருக்கிறோம்" என்று தெரிவித்தார். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சிவசேனாவுக்கு ஆதரவு கொடுக்கும்பட்சத்தில் சிவசேனா வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். அதோடு எம்.எல்.ஏ இறந்த அனுதாப வாக்கும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்த இடைத்தேர்தல் உத்தவ் தாக்கரேவுக்கு அக்னிப் பரீட்சையாகக் கருதப்படுகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி கிடைத்துவிட்டால் அது எதிர்காலத்தில் கட்சியை திறம்பட நடத்த உத்தவ் தாக்கரேவுக்கு உதவியாக இருக்கும். அதோடு மும்பை மாநகராட்சி தேர்தலை எதிர்கொள்ளவும் வசதியாக இருக்கும். தொகுதியில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், தலித்கள், வட இந்தியர்கள், மராத்தியர்கள் அதிகமாக இருக்கின்றனர். இதில் கிறிஸ்தவர்கள் வழக்கமாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பார்கள். ஆனால் அவர்கள் முழுமையாக வாக்களிக்க வெளியில் வரமாட்டார்கள்.

சரத் பவார்

மேலும் இந்தத் தொகுதியில் குஜராத் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் பாஜக தரப்பில் போட்டியிடுவதால் இங்குள்ள மராத்தியர்கள் சிவசேனாவுக்கு வாக்களிக்க வாய்ப்பு இருக்கிறது. முஸ்லிம்கள் வாக்கும் சிவசேனாவுக்கும் கிடைக்கும் என்று அந்தக் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஜோகேஸ்வரி தொகுதி சிவசேனா எம்.எல்.ஏ ரவீந்திர வாய்க்கர் இது குறித்து கூறுகையில், ``இந்தத் தொகுதியில் அனைத்து சமுதாயத்தினரும் இருக்கின்றனர். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கொடுத்திருப்பதால் சிவசேனா வேட்பாளரால் எளிதில் வெற்றி பெற முடியும்" என்று தெரிவித்தார்.

சிவசேனாவுக்கு சின்னம் கிடைக்குமா?

சிவசேனாவுக்கு வேறு ஒரு சிக்கலும் இருக்கிறது. தேர்தல் கமிஷன் சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருதரப்பினரும் தேர்தல் கமிஷனில் இது தொடர்பாக மனு கொடுத்திருப்பதால் வில் அம்பு சின்னத்தை உத்தவ் தாக்கரே அணி பயன்படுத்த அனுமதி கிடைக்குமா என்று தெரியவில்லை. அவ்வாறு அனுமதி கிடைக்காதபட்சத்தில் அது பாஜக-வுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படும். சிவசேனா என்றாலே வில் அம்பு சின்னம்தான் அனைவரது மனதிலும் இருக்கிறது. புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வது மிகவும் சவாலான காரியம் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இடைத்தேர்தல் பணிகளை ஏற்கெனவே சிவசேனாவினர் தொடங்கிவிட்டனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/AydgbYc

Post a Comment

0 Comments