"அமித் ஷாவுக்கு எங்களின் சிறிய பரிசு!"- ஜம்மு சிறைத்துறை டிஜிபி-யை கழுத்தறுத்துக் கொன்ற தீவிரவாதிகள்

மத்திய அமைச்சர் அமித் ஷா ஜம்மு-காஷ்மீரில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், இன்று அதிகாலையில் ஜம்மு-காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி-யை தீவிரவாதிகள் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளனர். ஜம்முவின் புறநகர்ப் பகுதியில் ஜம்மு-காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் குமார் லோஹியாவின் இல்லம் இருக்கிறது. இன்று காலையில் ஹேமந்த் குமார் கழுத்தை அறுத்துக் கொலைசெய்யப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஹேமந்த் குமார் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்த யாசிர் என்பவன் இந்தப் படுகொலையை செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. யாசிர் தற்போது தலைமறைவாகிவிட்டான். பாதுகாப்பு மிகுந்த வீட்டில் யாசிர் எப்படி கொலைசெய்துவிட்டு தப்பிச்சென்றான் என்பது மர்மமாக இருக்கிறது. போலீஸார் யாசிரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், படுகொலைக்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. லஷ்கர் இ தொய்பாவின் கிளை அமைப்பான மக்கள் பாசிச எதிர்ப்பு படை இதற்கு பொறுப்பேற்று செய்தி வெளியிட்டுள்ளது. ``எங்களது சிறப்புப் படை ஜம்முவின் உதைவாலாவில் சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் குமாரைக் கொலைசெய்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ளூர் மக்கள் அல்லாதவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட அனைத்து தாக்குதல்களுக்கும் நாங்கள்தான் பொறுப்பு. இது போன்ற தாக்குதல்கள் இனியும் அதிகமாக நடக்கும்.

எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் தாக்குதல் நடக்கும். தற்போது நடத்தப்பட்டிருப்பது ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் செய்திருக்கும் அமைச்சர் அமித் ஷாவுக்கு எங்களது சிறிய பரிசு" என்று தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர். ஹேமந்த் குமார் கடந்த ஆகஸ்ட் மாதம்தான் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். இது குறித்து கூடுதல் டிஜிபி முகேஷ் சிங் கூறுகையில், ``ஹேமந்த் குமாரின் வீட்டு வேலைக்காரன் யாசிர் தலைமறைவாகிவிட்டான். அவனை தேடி வருகிறோம். யாசிர் ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தைச் சேர்ந்தவன். கொலையாளி முதலில் ஹேமந்த் குமாரை மூச்சுத்திணறடித்துள்ளான். அதன் பிறகு உடைந்த பாட்டிலால் கழுத்தை அறுத்துள்ளான். அதன் பிறகு உடலை தீ வைத்து எரிக்க முயன்றுள்ளனர்" என்று தெரிவித்தார். மத்திய அமைச்சர் அமித் ஷாவின் சுற்றுப்பயணத்தின்போது தீவிரவாதிகளின் இந்தச் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 57 வயதாகும் ஹேமந்த் குமார் ஓய்வு பெற இன்னும் ஒரு ஆண்டே இருக்கும் நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து போலீஸார் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/JB8hGQT

Post a Comment

0 Comments