லாட்ஜ்களுக்கு செல்லும் தம்பதிகள் எப்போதும் ரகசிய கேமரா இருக்கிறதா என்பதை சோதனை செய்து கொள்வது வழக்கம். ஆனாலும் சில லாட்ஜ்களில் பணிபுரிபவர்கள் சட்டவிரோதமாக கழிவறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி அறைகளில் தங்குபவர்களை வீடியோ எடுக்கும் கொடும் சம்பவங்களும் வெளிச்சத்துக்கு வரும்.
ஆனால் உத்தரப்பிரதேச ஹோட்டலில் மர்ம நபர்கள் அறைகளில் ரகசிய கண்காணிப்பு கேமராவை மறைத்து வைத்து தம்பதிகளை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாடு முழுவதும் ஓயோ ஹோட்டல்கள் செயல்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஓயோ(OYO) ஹோட்டல் அறைகளில் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா போலீஸார் நான்கு பேரை கைது செய்துள்ளனர். இது குறித்து நொய்டா போலீஸார் கூறுகையில், ``ஆரம்பக்கட்ட விசாரணையில் ஹோட்டலில் அறைகள் எடுத்து தங்கும் தம்பதிகளை வீடியோ எடுத்து மிரட்டியதில் ஹோட்டல் ஊழியர்களுக்கு தொடர்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது. மர்ம கும்பல் ஹோட்டலில் அறைகளில் அறை எடுத்து தங்கி கண்காணிப்பு கேமராவை ரகசியமாக பொருத்துவிட்டு சென்றுவிடுவர்.
சில நாள்கள் கழித்து மீண்டும் அதே ஹோட்டலில் அறை எடுத்து தங்கி அங்கு பொருத்தப்பட்ட ரகசிய கேமராவை எடுத்து சென்று அதில் பதிவாகி இருக்கும் வீடியோவில் இடம் பெற்று இருக்கும் தம்பதிகளை மிரட்டி பணம் பறிப்பது வழக்கம். அந்த வீடியோவை சம்பந்தப்பட்ட தம்பதிக்கு அனுப்பி பணம் கேட்பது வழக்கம். இந்த செயலில் ஈடுபட்ட விஷ்னு சிங், அப்துல் வஹாவ், பங்கஜ் குமார், அனுராக் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நொய்டாவில் மூன்று கும்பல்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதில் ஒரு கும்பல்தான் ஹோட்டல் அறைகளில் கேமரா பொருத்தி வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்தது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 11 லேப்டாப், 21 மொபைல் போன், 22 சிம்கார்டு, 22 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த கும்பல் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. ஒருவர் தலைமறைவாக இருக்கிறார். விஷ்னு, அப்துல் ஆகியோர் வீடியோ எடுத்து தம்பதிக்கு அனுப்பும் வேலையை செய்தனர். மற்ற இருவர் போலி சிம்கார்டு ஏற்பாடு செய்தல் மற்றும் வங்கி கணக்கு திறக்கும் வேலையில் ஈடுபட்டனர் என்று தெரிவித்தார். இக்கும்பல் சட்டவிரோத கால் சென்டர்களையும் நடத்தி வந்துள்ளனர். இது குறித்து ஓயோ ஹோட்டல் தரப்பில் இன்னும் எந்த வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
from தேசிய செய்திகள் https://ift.tt/OehBc6g
0 Comments