ஹரியானாவில் பயிற்சி; மும்பையில் ஆக்‌ஷன் - 64 ஏடிஎம் கார்டுகளுடன் சிக்கிய இருவர்!

நாடு முழுவதும் ஏடிஎம் மெஷினில் பணம் திருடப்படும் சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. சில இடங்களில் ஏம்டிஎம் மெஷினை உடைத்து திருடுகின்றனர். சில நேரங்களில் உடைப்பதற்கு சிரமப்பட்டு மெஷினையே தூக்கிச்சென்றுவிடுகின்றனர். மகாராஷ்டிராவில் சில இடங்களில் ஜேசிபி மெஷின் வைத்து, ஏ.டி.எம் மெஷினை தூக்கிச்சென்ற சம்பவங்களும் நடந்துள்ளது. ஆனால் ஏ.டி.எம் மெஷினில் எப்படி திருட வேண்டும் என்பது குறித்து ஹரியானாவில் திருடர்களுக்கு சிறப்பு பயிற்சி நடந்து வருவது மும்பை போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. மும்பை மலாடு பகுதியில் உள்ள பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் சென்டரில் ஏதோ சந்தேகப்படும் படியான குளறுபடிகள் நடப்பதை ஏடிஎம் மெஷின்களை பராமரிக்கும் தனியார் நிறுவனம் கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு தகவல் கொடுத்தது.

கைதானவர்களுடன் போலீஸார்

உடனே அந்த வங்கி இது குறித்து போலீஸில் புகார் செய்தது. போலீஸார் விசாரணை நடத்தி அந்தேரி ஹோட்டலில் ரெய்டு நடத்தி ஆரிப் கான்(26), ரஷீத் கான்(22) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித்தகவல்கள் கிடைத்தது. ஏடிஎம் மெஷினில் எப்படி திருடவேண்டும் என்பது குறித்து ஹரியானாவில் தனி பயிற்சி நடப்பதாக தெரிய வந்தது.

இது குறித்து இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி கூறுகையில், ``கைது செய்யப்பட்டுள்ள ஆரிப் கான் ஹரியானாவில் உள்ள மேவாத் என்ற இடத்தில் ஏடிஎம் மெஷினின் செயல்பாட்டை எப்படி நிறுத்துவது என்பது குறித்து தனது உறவினரிடம் பயிற்சி எடுத்துள்ளான். பயிற்சி எடுத்துக்கொண்ட பிறகு ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களுடன் சென்று எப்படி ஏடிஎம் மெஷினில் திருட வேண்டும் என்பதை நேரில் பார்த்து தெரிந்து கொண்டான். அதன் பிறகு தனியாக சென்று குருகிராம், ஹரியானா, டெல்லி போன்ற இடங்களில் ஏடிஎம் களில் திருடி இருக்கிறான். அதன் பிறகு ஆரிப் கானுக்கு உதவியாளர் ஒருவரை கொடுத்திருக்கின்றனர். அந்த உதவியாளர் ரஷித் கானுக்கு நேரடியாக செயல்முறை பயிற்சியளிக்கத்தான் அவனை ஆரிப் கான் மும்பைக்கு அழைத்து வந்துள்ளான்.

ஏடிஎம்

திருடுவது எப்படி?

ஆரிப் கானும் அவனது கூட்டாளிகளும் பொதுவாக ஏடிஎம் மெஷின் சென்டருக்குள் நுழைந்தவுடன் உள்ளே ஒருவர் கண்காணிப்பு கேமரா அருகில் நின்று கொள்வது வழக்கம். அதன் பிறகு மற்றொருவர் ஏடிஎம் மெஷினில் பணம் எடுப்பார். மெஷினில் இருந்து பணம் வெளியில் வரும் நேரத்தில் மெஷினை ஆப் செய்துவிடுவர். அதன் பிறகு பணத்தை மெஷினில் இருந்து பிடுங்கி எடுத்துக்கொள்வர். பின்னர் வங்கி கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தங்களது வங்கிக்கணக்கில் இருந்து பணம் கட்டாகிவிட்டதாகவும், ஆனால் தங்களுக்கு பணம் கிடைக்கவில்லை என்று கூறுவர். வங்கி நிர்வாகமும் கம்ப்யூட்டரில் பார்த்துவிட்டுவிட்டு குளறுபடி இருப்பதை அறிந்து அவர்களது வங்கி கணக்கிற்கு பணத்தை திரும்ப செலுத்திவிடும்.

மும்பையில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் இதே போன்று ரூ.2 லட்சம் வரை ஏடிஎம் மெஷினில் இருந்து எடுத்துள்ளனர். இரண்டு பேரிடமிருந்து 64 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு அவர்களுக்கு ஏடிஎம் கார்டு எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். கார்டுகள் வாடகைக்கு யாரிடமாவது பெறப்பட்டதா அல்லது போலி ஆவணங்கள் மூலம் கார்டுகள் பெறப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹரியானாவில் பயிற்சி எடுத்த கும்பல் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள ஏடிஎம் மெஷினில் ஒரு லட்சம் வரை எடுத்திருப்பதாக போலீஸார் இருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/jgZ6a45

Post a Comment

0 Comments