மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 31ம் தேதி தொடங்கி விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகளைத் தரிசிப்பதற்காகவும், அரசியல் நிகழ்வுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று இரவு மும்பை வந்திருந்தார். அவர் அரசு இல்லத்தில் நேற்று இரவு தங்கி இருந்துவிட்டு இன்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் ஆகியோருடன் சென்று மும்பையில் பிரபலமான லால்பாக் ராஜா கணபதியைத் தரிசனம் செய்தார்.
அமித் ஷா தன்னுடன் தனது மனைவி மற்றும் பேரக்குழந்தைகளையும் அழைத்துச் சென்று இருந்தார். லால் பாக் ராஜாவின் பாதங்களில் கை வைத்து வழிபட்டவர் அங்கிருந்து புறப்பட்டு பாந்த்ராவில் மும்பை பா.ஜ.க தலைவர் அசிஷ் ஷெலார் சார்பாக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையையும் வழிபட்டார். அமித் ஷாவை வரவேற்று பாந்த்ரா முழுக்க ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் பிரமாண்ட பேனர்கள் வைத்திருந்தனர்.
அந்த இடத்துக்கு அருகில்தான் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் இல்லம் இருக்கிறது. எனவே தங்களது செல்வாக்கைக் காட்டும் விதமாக ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் அமித் ஷாவை வரவேற்று பேனர் வைத்திருந்தனர். அமித் ஷா, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுடன் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இன்னும் ஓரிரு மாதத்தில் மாநகராட்சித் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெறவேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இருக்கிறது.
பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் பலரும் லால்பாக் ராஜா கணபதியைத் தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர். நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரேயும் லால்பாக் ராஜாவை வழிபட்டுள்ளார். இந்த ஆண்டு மட்டும் லால் பாக் ராஜாவை 2 கோடி மக்கள் தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினமும் பக்தர்கள் பலமணி நேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
from தேசிய செய்திகள் https://ift.tt/C7foIqh
0 Comments