டாடா சன்ஸ் முன்னாள் தலைவரும், கட்டுமான நிறுவனமான சாபூர்ஜி பாலோன்ஜி நிறுவனத்தின் தலைவருமான சைரஸ் மிஸ்த்ரி நேற்று பிற்பகல் மும்பை அருகே பால்கர் என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார். சைரஸ் மிஸ்த்ரி மரணம் தொழில் துறையினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. சைரஸ் மிஸ்த்ரியுடன் பயணம் செய்த அவரின் நண்பர் ஜஹாங்கிர் என்பவரும் விபத்தில் காலமானார். சைரஸ் மிஸ்த்ரி சென்ற கார் பால்கர் அருகே சாலையில் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் உயிரிழப்பதற்கு காரணம் சைரஸ் காரில் பயணம் செய்த போது சீட் பெல்ட் அணியவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
அதோடு காரில் இருந்த ஏர்பேக் சரியாக வேலை செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. சைரஸ் தனது நண்பர்களுடன் குஜராத்தில் உள்ள உத்வாதா தீக்கோயிலுக்கு சென்று விட்டு வரும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. பார்ஸி சமுதாயத்தை சேர்ந்தவர்கள் உத்வாதாவில் இருக்கும் தீக்கோயிலுக்கு சென்று வருவது வழக்கம். சைரஸ் தனது நண்பர்கள் ஜஹாங்கீர், டாரியஸ், டாரியஸ் மனைவி டாக்டர் அனகிதா ஆகியோர் தீக்கோயிலுக்கு சென்று விட்டு காரில் வந்து கொண்டிருந்தனர். இதில் சைரஸ் மற்றும் அவரது நண்பர் ஜஹாங்கிர் ஆகியோர் பின் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
டாரியஸ் மனைவி காரை ஓட்டினார். அவருக்கு அருகில் அவரது கணவர் டாரியஸ் இருந்தார். முன்னால் சென்ற காரை முந்திச்செல்ல முயன்றதால் இந்த விபத்து நடந்திருப்பது சாலை விபத்தை நேரில் பார்த்த ஒருவர் மூலம் தெரிய வந்தது. சாலையோரம் கேரேஜ் வைத்திருக்கும் நிதிஷ் என்பவர் கார் விபத்தை நேரில் பார்த்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பெண் ஒருவர் காரை ஓட்டி வந்தார். அந்த கார் தவறான வழித்தடத்தில் முன்னால் சென்ற மற்றொரு காரை முந்திச்செல்ல முயன்றது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த டிவைடரில் மோதிக்கொண்டது. உடனே சம்பவ இடத்திற்கு நாங்கள் ஓடினோம். ஆனால் காரையோ அல்லது அதில் இருந்தவர்களையோ தொடவில்லை” என்று தெரிவித்தார்.
அளவுக்கு அதிகமான வேகத்தில் வந்ததும் விபத்துக்கு காரணம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். காயம் அடைந்த இரண்டு பேரும் இன்று மும்பை மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர். இந்த விபத்து குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தை உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். கடந்த ஜூன் 28ம் தேதிதான் சைரஸ் தந்தை காலமானார். இதே போன்று இந்த விபத்தில் ஜஹாங்கிரும் இறந்துவிட்டார். அவரது தந்தையும் கடந்த மாதம் 29-ம் தேதிதான் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
விபத்து குறித்து போலீஸார் மேலும் கூறுகையில், சோதனைச் சாவடியில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகள் மூலம் பிற்பகல் 2.21 மணியளவில் இந்த கார் கடந்து சென்றது தெரியவந்தது. சோதனைச் சாவடியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூர்யா ஆற்றின் பாலத்தில் கார் வந்து கொண்டிருந்தபோது, பிற்பகல் 2.30 மணியளவில் இந்த விபத்து நடந்தது. இந்த தூரத்தை கார் சுமார் ஒன்பது நிமிடங்களில் கடந்தது என்பதை இது காட்டுகிறது. அதாவது 9 நிமிடங்களில் 20 கிலோ மீட்டரை கடந்திருப்பது தெரியவந்திருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/lvxj2HU
0 Comments