மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்தபிறகு கட்சியை முழுமையாக தங்கள் கட்டுக்குள் கொண்டுவர உத்தவ் தாக்கரேயும், ஏக்நாத் ஷிண்டேயும் போராடி வருகின்றனர். ஏக்நாத் ஷிண்டே தனக்கு இருக்கும் முதல்வர் பதவி அதிகாரம் மற்றும் பாஜக-வின் ஆதரவு ஆகிய இரண்டையும் வைத்துக்கொண்டு சிவசேனாவை தனது கட்டுக்குள் கொண்டு வர முயன்று வருகிறார். உத்தவ் தாக்கரே இவ்விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டை மலை போல் நம்பி இருக்கிறார். உத்தவ்தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகிய இருவரில் யாரது அணி உண்மையான சிவசேனா என்பதை தேர்தல் கமிஷன் முடிவு செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்திருக்கிறது.
மும்பையில் ஒவ்வோர் ஆண்டும் தசரா அன்று தாதர் சிவாஜி பார்க்கில் சிவசேனா சார்பாக பொதுக்கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். பால்தாக்கரே இருந்தவரை அக்கூட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் அவர் ஆற்றும் உரை அனைவராலும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருந்தது. அங்கிருந்துதான் பால் தாக்கரே சிவசேனா கட்சியையே ஆரம்பித்தார். பால் தாக்கரே மறைவுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே ஒவ்வோர் ஆண்டும் தசராவின்போது தாதர் சிவாஜி பார்க் பொதுக்கூட்டத்தில் உரையாற்றி வருகிறார். இந்த ஆண்டு சிவசேனா உடைந்திருப்பதால் தாதர் சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம் நடத்துவதில் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
ஏக்நாத் ஷிண்டே இதில் மூக்கை நுழைக்கக்கூடும் என்று கருதியே உத்தவ் தாக்கரே தரப்பில் தாதர் சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கொடுக்கவேண்டும் என்று கேட்டு கடந்த சில நாள்களுக்கு முன்பே உள்ளூர் மாநகராட்சி அலுவலகத்தில் மனுக்கொடுத்திருக்கிறனர். அந்த மனுமீது மாநகராட்சி அதிகாரி இன்னும் முடிவு எடுக்காத நிலையில், ஏக்நாத் ஷிண்டே தரப்பில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.சதா சர்வான்கர் தசராவன்று தாதர் சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம் நடத்த தங்களுக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்று கோரி மாநகராட்சி அலுவலகத்தில் மனுக்கொடுத்துள்ளார்.
``உள்ளூர் எம்.எல்.ஏ என்ற முறையில் கடந்த பல ஆண்டுகளாக சிவசேனாவுக்காக நான் தான் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு கடிதம் கொடுத்து வருகிறேன்" என சதா சர்வான்கர் தெரிவித்துள்ளார். இதனால் யாருக்கு அனுமதி கொடுப்பது என்று தெரியாமல் மாநகராட்சி நிர்வாகம் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது.
இருவருக்கும் அனுமதி கொடுத்தால் அது சிக்கலில் முடிந்துவிடும். எனவே இவ்விவகாரத்தில் கணபதி விழா முடிந்த பிறகு முடிவு எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தவ் தாக்கரே ஆதரவு சட்டமேலவை உறுப்பினர் மனீஷா காயண்டே இது குறித்து கூறுகையில், ``உண்மையான சிவசேனா எது என்பதை மக்கள் விரைவில் தெரிந்து கொள்வார்கள். அவர்களின் இந்துத்துவ முகமூடி கிழிக்கப்படும். ஷிண்டே ஆதரவாளர்கள் யாரது உத்தரவை பின்பற்றுகிறார்கள் என்பதை இப்போது மக்கள் அறிவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். இவ்விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டேயிக்கு சரத் பவார் அளித்துள்ள ஆலோசனையில், ``முதல்வர் மோதல் போக்கை கடைப்பிடிப்பதை கைவிடவேண்டும். அனைவரையும் அரவணைத்து செல்லவேண்டும். ஏக்நாத் ஷிண்டே அனைவருக்கும்தான் முதல்வர்" என்று தெரிவித்தார். ஒவ்வொரு பிரச்னையிலும் இருதரப்பினரும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருவது போலீஸாருக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
1966-ம் ஆண்டிலிருந்து 56 ஆண்டுகளாக சிவசேனா தாதர் சிவாஜிபார்க்கில் தசரா அன்று பொதுக்கூட்டம் நடத்தி வருகிறது. எனவே அந்த உரிமையை ஏக்நாத் ஷிண்டேயிடம் விட்டுக்கொடுத்துவிடக்கூடாது என்பதில் உத்தவ் தாக்கரே உறுதியாக இருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/DjheRSb
0 Comments