போலீஸ் வேனில் கேக் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடிய கைதி! - வீடியோ வைரலானதால் வெடித்த சர்ச்சை

மும்பை அருகில் உள்ள உல்லாஸ் நகரைச் சேர்ந்த ரோஷன் ஷா என்ற கைதியை சிறையிலிருந்து விசாரணைக்காக மும்பை அருகில் இருக்கும் கல்யான் கோர்ட்டுக்கு போலீஸார் வேனில் அழைத்து வந்திருந்தனர். ரோஷன் இருந்த வேன் கோர்ட் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. கோர்ட்டுக்கு அவரைப் பார்க்க அவர் நண்பர்கள் வந்திருந்தனர். கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்ட நாளில் ரோஷனுக்கு பிறந்தநாள் எனத் தெரிகிறது. அதை தெரிந்துகொண்ட அவர் நண்பர்கள் உடனே ஓடிச்சென்று அருகில் இருந்த கடையிலிருந்து ஒரு கேக் வாங்கி வந்தனர். பின்னர், கேக்கை போலீஸ் வேன் ஜன்னல் வழியாக ரோஷனிடம் கொடுத்தனர். ரோஷன் கேக் வெட்டி தன்னுடைய பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடினார். பின்னர் கேக்கை தன்னுடைய நண்பர்களிடம் கொடுத்துவிட்டார்.

ரோஷன் போலீஸ் வேனில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியதை யாரோ சிலர் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கின்றனர். அந்த வீடியோ வைரலானதால் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

வேனில் இருந்தபடி கேக் வெட்டிய கைதி

ரோஷன் அரசியல் கட்சி ஒன்றோடு தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது. அவர்மீது உல்லாஸ் நகர், டிட்வாலா, கல்யான், டோம்பிவலியில் மூன்று கொலை முயற்சி வழக்குகள் உட்பட பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. கொலை முயற்சி வழக்கில் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக சிறையிலிருந்து வரும் ரோஷன், கல்யான் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்படவிருந்த நிலையில், அவர் நண்பர்கள் 50 பேர் கேக்குடன் வந்துவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

போலீஸாரும் வேனில் இருந்தபோதுதான் ரோஷன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். கைதிகளுக்கு கோர்ட் அனுமதியில்லாமல் எந்த உணவுப் பொருளும் கொடுக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/6MdNrKm

Post a Comment

0 Comments