மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் ஹரி என்ற இளைஞர் நோய்வாய்ப்பட்ட தன் தந்தையை ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காத காரணத்தினால் தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அது தொடர்பான வீடியோவை பத்திரிகையாளர்கள் சிலர் தங்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு, செய்தி வெளியிட்டிருக்கின்றனர்.
இந்த வீடியோ வைரலானதையடுத்து, பல்வேறு தரப்பினரும் அரசுக்கு எதிராக இணையத்தில் கருத்துகளைப் பதிவிட்டனர். இந்த நிலையில் அந்த வீடியோ பொய் என்று கூறி, தவறாக செய்தி வெளியிட்டதாக மூன்று பத்திரிகையாளர்கள்மீது காவல்துறை வழக்கு பதிவுசெய்திருக்கிறது. அந்த மூன்று பத்திரிகையாளர்கள்மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் சில பிரிவுகளின் கீழ் கடந்த சனிக்கிழமை வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹரி, ``என்னுடைய நோய் வாய்ப்பட்ட தந்தையை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காத காரணத்தினால் தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்'' எனக்கூறினார். இது தொடர்பான வீடியோ ஆகஸ்ட் 15-ம் தேதி இணையத்தில் பல்வேறு செய்தி சேனல்களில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இது குறித்து ஆய்வுசெய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதாகவும், அதில் பத்திரிகையாளர்கள் பகிர்ந்த தகவல் பொய் எனத் தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்துப் பேசும் பத்திரிகையாளர்கள், ``விசாரணையில் எங்களுக்கு எதிராக அறிக்கைகள் கொடுக்க அந்த நபரின் குடும்பத்துக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுத்திருக்கிறது. விசாரணையில் வெளியான தகவல் ஆதாரமற்றது. முறையாக மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தாமல், அரசின் அவலத்தை தெரியப்படுத்தும் எங்கள்மீது பொய் வழக்குகளை போடுகிறார்கள்" எனத் தெரிவிக்கின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/dAD6K9l
0 Comments