உத்தரப்பிரதேச மாநிலம், கன்னோஜ் பகுதியில் வசித்து வருபவர் பிஹாரி லால் (45). இவர் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தினக்கூலிக்கு வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், தொடர் மழையின் காரணமாக செங்கல் சூளையில் வேலையில்லாமல் போயிருக்கிறது. இதனால், சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்ட பிஹாரி லால், தன்னுடைய இந்திய பேங்க் `ஜன் தன்' வங்கிக் கணக்கிலிருந்து ரூ.100 எடுக்க திட்டமிட்டிருக்கிறார். அதன்படி அருகிலிருந்த ஏடிஎம் மையத்துக்குச் சென்றவர், தன்னுடைய கார்டைப் பயன்படுத்தி நூறு ரூபாய் எடுத்திருக்கிறார். பின்னர் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதற்கான மெசேஜ் அவரின் போனுக்கு வந்திருக்கிறது.
அதைக் கண்டு பிஹாரி லால் அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டார்.... காரணம் அவர் போனுக்கு வந்திருந்த மெசேஜில், ரூபாய் நூறு போக இன்னும் கணக்கில் ரூ.2,700 கோடி பேலன்ஸ் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது.
தன்னுடைய வங்கிக் கணக்கில் 2,700 கோடி ரூபாய் இருப்பதாக வந்திருந்த மெசேஜைக் கண்டு பதற்றமடைந்த பிஹாரி, உடனடியாக வங்கி அலுவலர்களை அணுகி தனது வங்கிக் கணக்கின் இருப்பை சரிபார்த்திருக்கிறார். மூன்று முறை சரிபார்த்தும் இருப்பில் ரூ.2,700 கோடியே காட்டியிருக்கிறது.
அதைத் தொடர்ந்து பிஹாரி வங்கி மேளாளரைச் சந்தித்து தகவல் தெரிவித்திருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவர், மீண்டும் பிஹாரியின் கணக்கை சரிபார்த்திருக்கிறார். அப்போது ரூ.126 மட்டுமே இருப்பில் காட்டியிருக்கிறது.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பேசுபொருளானதையடுத்து அந்த தொழிலாளி, ``சில நொடிகளில் கோடீஸ்வரனாகி விட்டேனா என வியந்து போனேன். ஆனாலும், மற்றவர்கள் பணம் எனக்கு வேண்டாம் என நினைத்தேன். அதனால், இது தொடர்பாக உடனடியாக வங்கி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தேன். அவர்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இப்படி நடந்திருக்கலாம் என்று கூறினார்கள். மூன்று முறை சரிபார்த்தும் என்னுடைய கணக்கில் ரூ.2,700 கோடி இருப்பதாகவே சொன்னார்கள்" எனத் தெரிவித்தார்.
from தேசிய செய்திகள் https://www.vikatan.com/news/viral/up-labourer-goes-to-withdraw-rs-100-finds-rs-2700-crore-in-bank-account
0 Comments