கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் பகுதியில் அமைந்துள்ளது சி.இ.டி. (CET) பொறியியல் கல்லூரி. இந்தக் கல்லூரி அருகே அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் அப்பகுதி அசோசியேஷன் சார்பில் 9 ஆண்டுகளுக்கு முன்பு நிழற்குடை அமைக்கப்பட்டது. அதில் பெஞ்ச் போன்று நீள வாக்கில் இருக்கை போடப்பட்டிருந்தது. அந்த இருக்கையில் பொறியியல் கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம்.
ஆனால், ‘மாணவ, மாணவிகள் இப்படி அருகருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது பிடிக்கவில்லை’ என்று அந்தப் பகுதிவாசிகள் சொன்னதாகக் கூறப்படுகிறது. எனவே அசோசியேஷன் சார்பில் பேருந்து நிழற்குடையில் உள்ள பெஞ்ச் போன்ற இருக்கைகள் அப்புறப்படுத்தப்பட்டன. அதற்கு பதிலாக தனித்தனியாக மூன்று இருக்கைகள் புதிதாக அமைக்கப்பட்டன. இது கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அதற்குத் தங்கள் எதிர்ப்பை காட்டுவதற்காக போராடத் திட்டமிட்டனர். மாணவர்களும், மாணவிகளும் நெருங்கி அமர்ந்திருப்பது பிடிக்காமல்தானே இப்படி செய்திருக்கிறார்கள், எனவே அதே பாணியில் போராட்டத்தை தேர்ந்தெடுத்தனர்.
நேற்று பேருந்து நிழற்குடைக்குச் சென்ற மாணவ, மாணவிகள் ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்து போராட்டம் நடத்தினர். மாணவர்கள் மடியில் மாணவிகளும், மாணவிகள் மடியில் மாணவர்களும் அமர்ந்து போட்டோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்தப் புகைப்படங்கள் வைரலானதால் மாணவர்கள் போராட்டம் நடத்திய இடத்துக்கு திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன் சென்றார்.
மாணவ, மாணவிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த மேயர் ஆர்யா ராஜேந்திரன் கூறுகையில், "மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து இங்கு பிரச்னை இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டேன். இங்குள்ள பஸ் ஸ்டாப்பில் இருக்கைகள் துண்டிக்கப்பட்ட விஷயத்தை அறிந்து கொண்டேன். இது சரியான செயல் அல்ல என்பதால் மாணவ மாணவிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வந்துள்ளேன்.
மாணவ, மாணவிகளின் போராட்ட குணத்தை நான் வாழ்த்துகிறேன். அவர்களுக்கு நிழற்குடையை பயன்படுத்த முழு உரிமை உண்டு. இங்கு புதிய பேருந்து நிழற்குடை அமைக்கப்படும். அது ஆண், பெண் சமத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமையும்" என்றார்.
இதுபற்றி அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறும்போது, "கல்லூரி மற்றும் ஹாஸ்டல் மாணவ, மாணவிகள் காலை 6 மணி முதல் இரவு வரை இந்த நிழற்குடையிலேயே இருப்பது, சிலரை முகம் சுழிக்கவைக்கிறது. அவர்கள் கல்லூரி வளாகத்தில் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். பொது இடங்களில் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். இருக்கைகள் மிகவும் பழையதாக ஆகிவிட்டதால் அதை மாற்றிவிட்டு, கொரோனா விதிமுறைப்படி சமூக இடைவெளிவிட்டு அமைக்கப்பட்டுள்ளது" என்றனர்.
கேரளா என்றாலே போராட்ட பூமிதான். ஏற்கெனவே முத்தப்போராட்டத்துக்கு பெயர்பெற்ற கேரளாவில், மடியில் அமர்வதையே போராட்டமாக மாற்றி வைரலாக்கிவிட்டனர் மாணவ, மாணவிகள்.
from தேசிய செய்திகள் https://ift.tt/IDQjnbB
0 Comments