நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவைக் கைதுசெய்யக் கோரி உத்தரப்பிரதேசம், பீகார், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தின் பிரக்யாராஜில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக, அரசியல் செயற்பாட்டாளர் ஜாவேத் முகமது என்பவரின் வீடு இடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து புல்டோசர்கள் மூலம் வீடுகள் இடிப்பதைத் தடுக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஜமியத் உலாமா-ஐ-ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணை கடந்த 16-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வு நீதிபதி போபண்ணா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ``மாநில அரசின் இடிப்பு நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க முடியாது.
ஆனால் சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது உரிய சட்ட விதிகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். இடிப்பு நடவடிக்கைகள் என்பது பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கக் கூடாது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு மூன்று நாள்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பிரயாக்ராஜ் , கான்பூர் சிவில் அதிகாரிகள் உரியப் பதிலளிக்க வேண்டும்'' எனக் கூறி, இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், உத்தரப்பிரதேச அரசு நேற்று நீதிமன்றத்தில், ``ஜாவேத் முகமது உள்ளிட்ட சிலரின் வீடுகள் இடிக்கப்பட்டது, சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிரான வழக்கமான நடைமுறையின் ஒரு பகுதியாகும். அதற்கான அறிவிப்புகள் நீண்ட காலத்திற்கு முன்பே அவர்களுக்கு வெளியிடப்பட்டன. வீடு இடிப்புகளை கலவரத்துடன் தவறாக தொடர்புப்படுத்துகிறார்கள். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வரவில்லை. அதையும் தாண்டி அவர்கள் நீதிமன்றத்தை நாடினால் முதலில் உயர் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும். அதன் பின்பே உச்ச நீதிமன்றம் வரவேண்டும்.
இரண்டு கான்பூர் கட்டடத் தொழிலாளர்கள் தங்கள் கட்டுமானங்கள் சட்டவிரோதமானவை என்று ஒப்புக்கொண்டனர். அதனால் நகர்ப்புற திட்டமிடல் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் கலவரம் தொடங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கப்பட்டது. எனவே, ஜமியத் உலமா-ஐ-ஹிந்த் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு மோசமான நிறத்தைக் கொடுக்க முயன்றுள்ளார். மேலும், உ.பி நகரத் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டிற்கான சட்டம் 1972-ன் படி மாநில நிர்வாகத்தைச் சாராத உள்ளூர் மேம்பாட்டு அதிகாரிகளால் இடிப்புகள் நிகழ்த்தப்பட்டன.
கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கையில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC), இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC), UP குண்டர்கள் மற்றும் சமூக விரோதிகள் நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1986, பொதுச் சொத்து சேதம் தடுப்பு சட்டம், உத்தரப் பிரதேசம் பொது மற்றும் தனியார் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் சட்டம், 2020 மற்றும் விதிகள் 2021 ஆகிய சட்டங்களின் கீழ் மாநில அரசு அவர்கள்மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என விளக்கமளித்திருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/eVWlqaY
0 Comments