மகாராஷ்டிரா: சமரச முயற்சி தோல்வி; அரசு இல்லத்தை காலி செய்த முதல்வர் உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிராவில் சிவசேனா மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருப்பதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சிவசேனாவில் இருந்து 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டேயுடன் உத்தவ் தாக்கரே நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் அரசு எந்நேரமும் கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு பேஸ்புக் லைவ் மூலம் உத்தவ் தாக்கரே உணர்ச்சிப்பூர்வமாக மக்களுக்கு உரையாற்றினார். இதில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து உத்தவ் தாக்கரே தனது அரசு இல்லமான வர்ஷாவில் இருந்து நேற்று இரவே குடும்பத்தோடு காலி செய்துவிட்டு பாந்த்ராவில் உள்ள சொந்த வீடான மாதோஸ்ரீ இல்லத்திற்கு சென்றுவிட்டார். பெரிய பெரிய பெட்டிகள் வர்ஷா இல்லத்தில் இருந்து காருக்கு எடுத்துச்செல்லும் வீடியோ வெளியாகி வைரலானது. உத்தவ் தாக்கரேயின் பாந்த்ரா வீட்டிற்கு வெளியில் ஏராளமான கட்சி தொண்டர்கள் காத்திருந்து உத்தவ் தாக்கரேயை வரவேற்றனர். உத்தவ் தாக்கரேயிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. அப்படி இருந்தும் இரவோடு இரவாக அரசு இல்லத்தை காலி செய்துவிட்டு சொந்த வீட்டிற்கு சென்றுவிட்டார்.

உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா ஆளுநரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏக்நாத் ஷிண்டே தனக்கு 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறி கடிதம் அனுப்பி இருக்கிறார். அவர்களில் 30 பேர் சிவசேனாவை சேர்ந்தவர்கள் ஆவர். நேற்று இரவு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், உத்தவ் தாக்கரேயை சந்தித்து இப்பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசித்தார். இதில் ஏக்நாத் ஷிண்டேயை முதல்வராக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்று ஏக்நாத் ஷிண்டே கூறுவதால் இத்திட்டம் சாத்தியம் இல்லை முடிவு செய்யப்பட்டு கைவிடப்பட்டது. இதற்கு முன்பு சிவசேனாவில் இருந்து தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சகன் புஜ்பால், ராஜ் தாக்கரே, மத்திய அமைச்சர் நாராயண் ராணே ஆகியோர் விலகி இருக்கின்றனர். இதில் ராஜ் தாக்கரே விலகும் போது மட்டும் சிவசேனா தொண்டர்கள் சிலர் ராஜ் தாக்கரே பக்கம் சென்றனர் என்பது குறிப்பிடதக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/nIBXdGz

Post a Comment

0 Comments