``காஷ்மீரில் நிலைமையை மேம்படுத்த ஏதாவது செய்யுங்கள்"- மத்திய அரசுக்கு உமர் அப்துல்லா கோரிக்கை

இந்திய வடக்கு எல்லையான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே, தீவிரவாத அமைப்புகளால் பொதுமக்கள், குறிப்பாக வெளி மாநிலத்தவர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாகக் காஷ்மீர் பண்டிட்களுக்கு எதிராக வன்முறைச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அரசியல் கட்சிகள் பலவும் மத்திய அரசை விமர்சித்து வருகின்றன. மேலும், சமீப காலங்களில், அரசு ஊழியரான காஷ்மீர் பண்டிட் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டது, டிக் டாக் பிரபலம் ஒருவர் வீட்டுக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்டது, காஷ்மீரில் வங்கியொன்றில் வேலைபார்த்து வந்த நபர் வங்கியிலேயே சுடப்பட்டது மற்றும் அதே நாளில் மேலும் இரண்டு பேர் தீவிரவாதிகளால் உயிரிழந்த சம்பவம் என அடுத்தடுத்து வன்முறைச் சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், ``காஷ்மீரில் நிலைமையை மேம்படுத்த மத்திய அரசு ஏதாவது செய்யவேண்டும் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

உமர் அப்துல்லா

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, ``இங்கு நிலைமை என்னவென்பது உங்கள் அனைவரின் முன்பும் இருக்கிறது. அசம்பாவித சம்பவங்கள் நடக்காத நாளே இல்லை. மக்கள் அனைவருமே துன்பத்தில் உள்ளனர். அவர்களின் நிலைமை மேம்பட வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். அதற்கு மத்திய அரசு ஏதாவது செய்யவேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார்.

மேலும், ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தல் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த உமர் அப்துல்லா, ``தேர்தலை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. தேர்தல் ஆணையம் அதனை முடிவு செய்த பிறகு தான், அதற்கான பணிகளை நாங்கள் தொடங்குவோம். இப்போதைக்கு தேர்தல் பற்றி பேசவோ அல்லது அதற்கு நாங்கள் தயாராகவோ இல்லை" எனக் கூறினார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/uq5DsH2

Post a Comment

0 Comments