மும்பை அருகே ஹெலிகாப்டர் ஒன்று 9 பேருடன் நடுக்கடலில் ஒ.என்.ஜி.சி ஆயில் எடுக்கும் இடத்துக்குச் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. அதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து, சாகர் கிரன் ஒ.என்.ஜி.சி ஆயில் தளத்துக்கு அருகே கடலில் விழுந்தது. மிதவை பொருத்தப்பட்டிருந்ததால் ஹெலிகாப்டர் கடலில் விழுந்தும் நீரில் மூழ்காமல் தப்பியது.
தகவலறிந்து இரண்டு கப்பல்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டன. அதோடு கடலோர பாதுகாப்புபடை விமானம் ஹெலிகாப்டர் கடலில் விழுந்த இடத்துக்குவந்து தேவையான உதவிகளைச் செய்தது. ஹெலிகாப்டர் ஆயில் எடுக்கும் இடத்தில் இறங்க முயன்றபோது பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அதன்காரணமாக தரையிறங்க வேண்டிய இடத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்தில் மிதவையின் உதவியுடன் தரையிறங்கியிருக்கிறது.
மீட்பு பணியில் மால்விய-16 கப்பலும் ஈடுபட்டது. ஹெலிகாப்டரில் பயணித்த 9 பேரும் படகு மற்றும் கப்பல்கள் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்தத் தகவலை கடலோர பாதுகாப்பு படை செய்தித் தொடர்பாளர் ஆர்.கே.சிங் தெரிவித்தார். மீட்பு பணிகள் ஒரு மணி நேரம் நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மும்பை அருகே நடுக்கடலில் ஒ.என்.ஜி.சி நிறுவனத்துக்குச் சொந்தமான ஆயில் தளம் இருக்கிறது. இதில் ஆயில் எடுக்கப்பட்டு வருகிறது. மும்பையில் தற்போது மழைக்காலம் என்பதால் கடலில் எப்போதும் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இது போல் கடலில் கடுமையான சீற்றம் ஏற்பட்டு ஒ.என்.ஜி.சி நிறுவனம் ஆயில் எடுக்கும் தளத்தில் அதிகாரிகள் தங்கியிருந்த படகுகள் கடலில் இழுத்துச்செல்லப்பட்டு பலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
from தேசிய செய்திகள் https://ift.tt/7EMcbhA
0 Comments