உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க சிறுபான்மை அணித் தலைவராக இருப்பவர் அதிஃப் நிஜாமி. இவர்மீது படவுன்நகர் காவல்நிலையத்தில் அவர் மனைவியும், பா.ஜ.க சிறுபான்மை பிரிவு மண்டல துணைத் தலைவருமான கஹ்கஷன் பாத்திமா புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில், ``திருமணம் ஆனதிலிருந்து அவ்வப்போது வரதட்சணைக் கேட்டு என்னைத் துன்புறுத்துவார். நானும் முடிந்தவரைச் சமாளித்துக்கொண்டிருந்தேன்.
ஆனால், சமீபமாக வரதட்சணையாக கார் கேட்டு என்னை துன்புறுத்தத் தொடங்கினார். நாளுக்கு நாள் அதிகமாக அடிக்கவும் தொடங்கிவிட்டார். இவருக்கு உடந்தையாக அவரின் தாயார் மீனா என்ற ரஃபத் ஜஹானும் என்னைத் தாக்கி கொடுமைப்படுத்துகிறார். கடந்த 27-ம் தேதி மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டேன். அதனால் பலத்த காயமும் ஏற்பட்டிருக்கிறது. எனவே என்னை வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தும் என் கணவர், அவர் தாயார் ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், அதிஃப் நிஜாமிமீது வழக்கு பதிவுசெய்து, இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக ஊடகங்களும் பேசிய கஹ்கஷன் பாத்திமா, ``இதற்கு முன் அளித்த புகாரிலும், அரசியல் அழுத்தம் காரணமாக, காவல்துறை என் கணவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போதாவது உயர் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை அதிஃப் நிஜாமி திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/OLNu90P
0 Comments