ஆண்டிபயோடிக் செலுத்தியதால் உடல்நலக்குறைவு? - தீவிர சிகிச்சையில் 4 குழந்தைகள்! - என்ன நடந்தது?

கர்நாடக மாநிலம், சாகரில் உள்ள தாலுகா சப் டிவிஷன் மருத்துவமனையில் காய்ச்சல், இருமல், வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் காரணமாக அண்மையில் 14 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு மருத்துவர்கள் வழக்கமான மருத்துவச் சிகிச்சைகளை அளித்து வந்திருக்கின்றனர். அந்த 14 குழந்தைகளில், பத்து மாதக் குழந்தைகள் சிலரும் அடங்குவர்.

இந்த நிலையில், அந்த 14 குழந்தைகளுக்கும் செவிலியர்கள் ஆண்டிபயோடிக் ஊசி செலுத்தியதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, அவர்களில் 4 பேருக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்திருக்கிறது. பின்னர் உடனடியாக அவர்களில் மூன்று பேர் சிவமோகா மாவட்ட பொது மருத்துவமனையிலும், ஒருவர் அதே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஊசி

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, ஊடகங்களிடம் பேசிய மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேஷ் சுரகிஹள்ளி, ``மருத்துவமனையில் உடல் உபாதைகள் காரணமாக அனுமதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இதே ஊசிதான் செலுத்தப்பட்டது. ஆனால், அவர்களில் சில குழந்தைகளுக்கு மட்டுமே இப்படி ஆகியிருக்கிறது. தற்போது அனைவரும் மாற்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவரும் நலமாக இருக்கின்றனர். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறோம். உரிய நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

அரசு மருத்துவமனை!

கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ ஹரதாலு ஹாலப்பா சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``சம்பவம் குறித்து அறிந்ததும் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றேன். குழந்தைகளை உடனடியாகப் பரிசோதிக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினேன். தற்போது ஒவ்வாமை ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. குழந்தைகள் குணமடைய எங்கள் மருத்துவர்கள்மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/yIGtJ9R

Post a Comment

0 Comments