வயநாடு செல்லும் ராகுல்... எம்.பி அலுவலகம் நொறுக்கப்பட்ட வழக்கில் 19 எஸ்.எஃப்.ஐ நிர்வாகிகள் கைது!

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள இடங்கள் பஃபர் ஸோன் ஆக அறிவிக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வயநாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை சுற்றி பஃபர் ஸோன் அறிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா மாநிலத்தில் ஆளும் சி.பி.எம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ சார்பில் வயநாட்டில் நேற்று மாலை பேரணி நடைபெற்றது. பேரணி வயநாடு கல்பற்றா பகுதியில் சென்றது.

அப்போது அங்கிருந்த ராகுல் காந்தியின் எம்.பி அலுவலகத்துக்குள் புகுந்த எஸ்.எஃப்.ஐ நிர்வாகிகள் அங்கிருந்த இருக்கைகள், பைல்களைவீசி எறிந்ததுடன், காந்தி, ராகுல் காந்தி ஆகியோரது படங்களை தூக்கி வீசி சேதப்படுத்தினர். அங்கிருந்த அலுவலக ஊழியர்கள் மூன்று பேர் மீது தாக்குதல் நடத்தியதுடன் ராகுல் காந்தியின் இருக்கையில் வாழை மரங்களை நட்டுவைத்தனர். இந்த சம்பவம் தேசிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் கோபமான காங்கிரஸ் கட்சியினர் நேற்று இரவு தொடங்கி இன்று வரை கேரள மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் வயநாட்டில் முகாமிட்டுள்ளனர்.

ராகுல் காந்தி இருக்கை மீது நடப்பட்ட வாழை மரம்

இந்த சம்பவத்துக்கு கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார், ``பஃபர் ஸோன் ஏற்படுத்துவது குறித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. அது சம்பந்தமாக மத்திய, மாநில அரசுகள்தான் ஏதாவது செய்ய முடியும். இந்த தீர்ப்பை நடைமுறைபடுத்துவது சம்பந்தமாக முடிவு எடுக்க வேண்டியது மாநில அரசு. அப்படி இருக்கும்போது ராகுல் காந்தி எம்.பி அலுவலகத்தை அடித்து நொறுக்க என்ன காரணம். மாநிலத்தில் இதுவரை காணாத அளவுக்கு நடந்துள்ள குற்றத்தில் முதல்வர் பினராயி விஜயனுக்கு நேரடி தொடர்பு உள்ளது" என கே.சுதாகரன் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி அலுவலக மீது தாக்குத நடத்தப்பட்டதை முதல்வர் பினராயி விஜயன் கண்டித்துள்ளார். "ராகுல் காந்தியின் வயநாடு அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன். நம்நாட்டில் ஒவ்வொருவருக்கும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும், ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவிக்கவும் உரிமை உள்ளது. இருப்பினும் அது எல்லைதாண்டி செல்லக்கூடாது. இது தவறான ஒரு போக்கு. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என பினராயி விஜயன் கூறியுள்ளார். சி.பி.எம் பொதுச் செயலாளர் சீதராம் யெச்சூரியும் எஸ்.எஃப்.ஐ தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி எம்.பி அலுவலகம் மீது தாக்குதல்

ராகுல் காந்தியின் எம்.பி அலுவலகம் உடைக்கப்பட்ட வழக்கில் எஸ்.எஃப்.ஐ மாவட்ட தலைவர் ஜோயல் ஜோசப், செயலாளர் ஜிஷ்ணு ஷாஜி உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். `மத்திய அரசு அமலாக்கத்துறை மூலம் விசாரணை என்ற பெயரில் ராகுல் காந்தியை வேட்டையாடும் நிலையில், மத்திய அரசை சந்தோஷப்படுத்த சி.பி.எம் அரசு இபடி ஒரு செயலை செய்துள்ளது’ என காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ராகுல் காந்தி வரும் 30, 1 , 2 ஆகிய தேதிகளில் மூன்று நாள்கள் சுற்று பயணமாக வயநாட்டுக்கு வருகிறார். இதையடுத்து ராகுல் காந்திக்கு பெரிய அளவில் வரவேற்பு அளிக்க காங்கிரஸ் கட்சியினர் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/9Ur7Yl2

Post a Comment

0 Comments