சிவசேனா எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் அதிருப்தி கோஷ்டி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் சென்றுவிட்டனர். இதனால் மும்பையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் அலுவலங்கள் சிவசேனா தொண்டர்களால் தாக்கப்படும் அபாயம் இருக்கிறது. மும்பை குர்லாவில் அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.மங்கேஷ் குடால்கரின் அலுவலகத்திற்கு வெளியில் வைக்கப்பட்டு இருந்த பெயர் பலகையை சிவசேனா தொண்டர்கள் அடித்து சேதப்படுத்தினர். இது போன்று நகரின் பல இடங்களில் நடக்கும் அபாயம் இருக்கிறது. இதனால் சிவசேனா கட்சி அலுவலகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதோடு பாஜக தலைவர்களின் வீடுகளுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேவேந்திர பட்னாவிஸ் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. திடீரென சிவசேனா தொண்டர்கள் புகுந்து தாக்குதல் நடத்திவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மும்பை முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சிவசேனா தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டால் அதனை கட்டுப்படுத்த முடியாது. விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். இந்நிலையில் சிவசேனா அமைச்சர் நிதின் ராவத் அளித்த பேட்டியில், ``சிவசேனாவுக்கு எதாவது நடந்தால் மும்பை பற்றி எரியும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், ``மும்பையில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டு இருப்பதை பார்க்கும் போது சிவசேனா தொண்டர்களின் வன்முறையை பயன்படுத்தி மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தமாட்டார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். அமைச்சரின் எச்சரிக்கையை தொடர்ந்தே மும்பை போலீஸார் நகர் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேருக்கு இதுவரை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. ஆனால் சட்டமன்ற நடவடிக்கைகளை தவிர்த்து பிறகூட்டங்களில் கலந்து கொள்ளாத எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/mIeCBOt
0 Comments