செய்தி வெளியீடு எண் : 748 நாள்: 11.05.2022
செய்தி வெளியீடு
திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி
விவசாயிகளுக்குத் தேவையான இரசாயன
உரங்களை ஒன்றிய அரசிடமிருந்து உரிய காலத்தில் பெற்று, எவ்வித தடையுமின்றி தமிழகத்தின்
அனைத்துப் பகுதி விவசாயிகளுக்கும் கிடைத்திட தமிழ்நாடு அரசு சீரிய நடவடிக்கைகளை தொடர்ந்து
மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், சில இடங்களில்
உரங்களை அதிக விலைக்கு விற்பதாகவும், உரங்களுடன், விவசாயிகள் கேட்காத இதர இடுபொருட்களையும்
சேர்த்து விற்பதாகவும், உரங்களை பதுக்கி வைப்பதாகவும் அரசுக்கு செய்திகள் வந்தன.
இதுகுறித்து, மானிய விலையில் வழங்கப்படும்
இரசாயன உரங்களை அதிக விலைக்கு விற்றாலோ, பதுக்கல் செய்தாலோ, விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டிற்கு மானிய உரங்களை பயன்படுத்தினாலோ
சம்பந்தப்பட்ட உரக்கடைகளின் உரிமங்கள் இரத்து செய்யப்படும் என
மாநில மற்றும் மாவட்ட அளவில் அனைத்து உரக்கடைகளுக்கும்
அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், விவசாயிகளின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள அரசின்
உத்தரவினை முறையாக பின்பற்றாமல், சில இடங்களில் உரக்கடைகளில் தொடர்ந்து விதிமீறல்கள்
நடைபெற்றதால், தமிழகத்தின் அனைத்து
மாவட்டங்களிலும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு,
கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி, 750 மொத்த உர விற்பனைக்
கடைகள், 11,548 கூட்டுறவு, தனியார் சில்லறை உர விற்பனை நிலையங்கள், 54 உர இருப்பு கிடங்குகள், 56 கலப்பு
உர உற்பத்தி நிறுவனங்கள், 30 மாவட்ட சோதனை சாவடிகள், 7 தொழிற்சாலைகள் ஆக மொத்தம்
12,445 இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆய்வில், 131 உரக்கடைகள் இருப்பு தகவல் பலகை இல்லாமல் உரங்களை விற்பனை செய்ததாகவும்,
141 உரக் கடைகளில் உர இருப்பு வித்தியாசமும்,
51 கடைகள் உரிய அனுமதி பெறாமல் உர விற்பனையில் ஈடுபட்ட வகையிலும், எட்டு உரக் கடைகள் உர விற்பனை முனையக்கருவியின் மூலம்
(Point of Sale (PoS)) பட்டியலிடாமல் விற்பனை செய்ததாகவும், இரண்டு உரக் கடைகள் கட்டாயப்படுத்தி
உரங்களுடன் இதர இடுபொருட்களையும் இணைத்து விற்பனை செய்ததாகவும் இரண்டு உரக் கடைகள்
வேளாண் பயன்பாடு இல்லாத இதர பயன்களுக்கு உரங்களை விற்றதாகவும் கண்டறியப்பட்டன.
உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ன்படி,
விதிமீறலில் ஈடுபட்ட ஒரு உரக்கடையின் மீது
சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 52 உரக்கடைகளின் விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக
இரத்து செய்யப்பட்டுள்ளதோடு, 243 உரக்கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசுகள் அனுப்பப்பட்டுள்ளன.
மீதமுள்ள உரக்கடைகளின் மீதும் துறை ரீதியான
நடவடிக்கை மேற்கொள்வதற்கு மாவட்ட அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில்
கலப்பு உர உற்பத்தி நிறுவனம் ஒன்று சட்டத்திற்கு
புறம்பாக உரிய அனுமதி பெறாமல் கலப்பு உரம் தயாரித்தது கண்டறியப்பட்டு, அந்த நிறுவனத்திற்கு
சீல் வைக்கப்பட்டதுடன், சரக்கு வாகனத்தில் இருந்த 19 மெ.டன் கலப்பு உரமும் வாகனத்துடன்
கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த கலப்பு
உர உற்பத்தி நிறுவனத்தின் மீது 08.05.2022 அன்று முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு,
உரக்கட்டுப்பாட்டு ஆணை, 1985-ன்படி நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், வேளாண் இயக்குநர் அலுவலகத்தில்
செயல்பட்டுவரும் உழவர் உதவி மையத்தில் (அலைபேசி
எண்.93634 40360) பெறப்படும் புகார்கள் மீதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து
சீரான உர விநியோகம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின்
உத்தரவின்படி, விவசாயிகளுக்கு தேவையான இரசாயன உரங்களை எவ்வித தட்டுப்பாடுமின்றி கிடைப்பதற்கு
வேளாண்மைத்துறை தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் அவ்வப்போது
பறக்கும் படை வாயிலாக உரக்கடைகளில் திடீர்
ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விவசாய பெருங்குடி மக்களுக்கு சீராக உர விநியோகம் செய்யப்படுவது
கண்காணிக்கப்படும். அரசின் உத்தரவினை மீறி, இதுபோன்று, விதி மீறலில் ஈடுபடும் உரக்
கடைகளின் மீது துறை ரீதியாகவும்,
சட்டரீதியாகவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாண்புமிகு வேளாண்மை – உழவர்
நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள் தெரிவித்தார்கள்.
0 Comments