கேரள மாணவி உயிரிழந்த சம்பவம்: சிக்கன் ஷவர்மாவில் ஷிகெல்லா பாக்டீரியா; என்ன செய்யும் இந்த நுண்கிருமி?

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி, சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கெட்டுப்போன கோழி இறைச்சியில் செய்த ஷவர்மாவால் மாணவி இறந்ததாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அதில் ஷிகெல்லா பாக்டீரியா (Shigella bacteria) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் கரிவெள்ளூரைச் சேர்ந்த மாணவி தேவநந்தா, காசர்கோடு செறுவத்தூர் பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த 'ஐடியல் கூல்பார்' என்ற கடையில் ஏப்ரல் 29 மற்றும் 30-ம் தேதிகளில் ஷவர்மா சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சில நாள்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனை சிகிச்சையில் இருந்தநிலையில், எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். அங்கு சாப்பிட்ட மற்ற 50 மாணவர்களுக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஷவர்மா சாப்பிட்டு மாணவி இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கேரள மாநிலம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து, அந்த ஷவர்மா கடையை மூடி, சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்தது.

இந்நிலையில் அந்த ஷவர்மாவில் ஷிகெல்லா பாக்டீரியா மற்றும் தீங்கு விளைவிக்கும் மூன்று நுண்ணுயிரிகளால் மாசுபட்டிருப்பதை கோழிக்கோட்டில் உள்ள ஆய்வகம் உறுதிப்படுத்தி உள்ளது. ஷிகெல்லா பாக்டீரியா குடல் பகுதியைத் தாக்கும் தொற்று. அதனால் நோய்த்தொற்றின் முக்கிய அறிகுறியாக வயிற்றுப்போக்கு அதிலும் குறிப்பாக ரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு உண்டாகும். நோய்த்தொற்று பிறருக்கும் மிக எளிதாகப் பரவும். ஷிகெல்லா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மலத்தில் இருந்து சிறிய அளவிலான பாக்டீரியா மற்றவரின் உடலுக்குள் போகும்போது அந்த நபரும் ஷிகெல்லா நோயால் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.

Bacteria (Representational Image)

அதாவது உணவைத் தயாரிக்கும் ஒருவர் கழிப்பறை சென்ற பின்னர் கைகளை சரியாக கழுவாத பட்சத்தில், நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட உணவு மற்றும் தண்ணீர் வழியாக அது மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புண்டு.

இரண்டு நாள்களுக்குப் பிறகு, இந்நோய்த்தொற்றின் அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கும். தொற்றின் அறிகுறிகளாக வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, காய்ச்சல் மற்றும் குமட்டல் வாந்தி போன்ற அறிகுறிகள் உண்டாகும். சாதாரண தொற்று ஒரு வாரத்திற்குள் தானாகவே சரியாகி விடும். தொற்றின் தீவிரம் அதிகமாகும் பட்சத்தில், நிலைமை மாறலாம்.



from தேசிய செய்திகள் https://ift.tt/FPlMOvD

Post a Comment

0 Comments