மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தேடப்பட்டுவந்த 4 பேர் குஜராத்தில் கைது!

மும்பையில் 1993-ம் ஆண்டு தாவூத் இப்ராஹிமும், அவனது கூட்டாளிகளும் இணைந்து நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 257 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரித்து வந்தது. இந்த வழக்கு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுவிட்டனர். ஆனால், இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் தாவூத் இப்ராஹிம், சோட்டாசகீல் உள்ளிட்ட சிலர் தொடர்ந்து தலைமறைவாகவே இருக்கின்றனர்.

அவர்களை சிறப்பு நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 4 பேர் குஜராத்தின் அகமதாபாத்தில் பதுங்கியிருப்பதாக குஜராத் தீவிரவாதத் தடுப்புப் படைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனே அவர்களை தீவிரவாதத் தடுப்புப் படை கைது செய்திருக்கிறது. கைதான அபு பக்கர், செய்யத் குரேஷி, மொகமத் குரேஷி, மொகமத் யூசுப் இஸ்மாயில் ஆகிய நான்கு பேரும் மும்பையைச் சேர்ந்தவர்கள்.

மும்பை குண்டு வெடிப்பு காட்சி

அவர்கள் 1995-ம் ஆண்டு தங்களது அடையாளத்தை மறைப்பதற்காக போலி ஆவணங்களை கொடுத்து பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு நாட்டை விட்டு சென்றிருக்கின்றனர். சி.பி.ஐ அவர்களை 29 ஆண்டுகளாக தேடி வந்தது. இண்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ்கூட விடப்பட்டிருந்தது.

இதுகுறித்து குஜராத் தீவிரவாதத் தடுப்புப் படை அதிகாரி விஷ்வகர்மா அளித்தப் பேட்டியில், ``எங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், நான்கு பேரையும் கைது செய்திருக்கிறோம். அவர்கள் கடந்த 4 நாள்களுக்கு முன்புதான் அகமதாபாத் வந்திருக்கின்றனர். அவர்கள் நான்கு பேரும் சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.

நான்கு பேரும் தாவூத் இப்ராஹிம், மொகமத் தோஷா ஆகியோரிடம் தங்கக் கடத்தல்காரர்களாக வேலைசெய்தனர். அவர்களை மொகமத் தோஷா இந்தியாவில் தீவிரவாதத்தை பரப்புவதற்காக 1993-ம் ஆண்டு வளைகுடா நாடு ஒன்றுக்கு தாவூத் இப்ராஹிமைச் சந்திக்க அனுப்பிவைத்தான். தாவூத் இப்ராஹிம் உத்தரவின்பேரில் அங்கிருந்து அவர்கள் பாகிஸ்தான் சென்றனர். அவர்களுக்கு வெடிகுண்டுகளை எப்படி தயாரிக்கவேண்டும் என்பது குறித்தும், ஆயுதங்களை எவ்வாறு கையாளவேண்டும் என்பது குறித்தும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ பயிற்சி கொடுத்திருக்கிறது. மும்பை தாக்குதலுக்கான தாவூத் இப்ராஹிமின் அனைத்து சதியிலும் நான்கு பேருக்கும் தொடர்புபிருக்கிறது. மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு அவர்கள் நான்கு பேரும் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றுக்கொண்டு வளைகுடா நாட்டுக்குச் சென்றிருக்கின்றனர். இதில் அபுபக்கர் மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கப் பிறகு ஆயுதங்களை கடலில் போட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தான் என்றும் விஷ்வகர்மா தெரிவித்தார்.

தாவூத் இப்ராஹிம்

நான்கு பேரும் மீண்டும் இந்தியாவுக்கு என்ன காரணத்துக்காக வந்தார்கள் என்று தெரியவில்லை என்றாலும், அவர்கள் தங்களது பாஸ்போர்ட்டை புதுப்பிக்கும் நோக்கத்தில் இந்தியா வந்திருக்கலாம் எனத் தீவிரவாதத் தடுப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர். மும்பையில் மனிஷ் மார்க்கெட் அருகில் அவர்கள் வசித்த வீடு இன்னும் பாழடைந்த நிலையில் இருக்கிறது. கைது செய்யப்பட்டவர்களில் மொகமத் குரேஷி 2002-ம் ஆண்டு இந்தியாவுக்குவந்து பெங்களூரில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு அவருடன் மீண்டும் வளைகுடா நாட்டுக்குச் சென்றிருப்பதும் தெரியவந்திருக்கிறது. இதில் செய்யத் குரேஷி தமிழகத்தின் விழுப்புரத்தில் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் எடுத்திருப்பது தெரியவந்திருக்கிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/t0dy9Iu

Post a Comment

0 Comments