இரண்டாவது கணவரின் மகனோடு காதல்: சொந்த மகளைக் கொன்ற இந்திராணிக்கு ஜாமீன்!

மும்பையில் ஐ.என்.எக்ஸ் மீடியாவின் உரிமையாளராக இருந்த பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது மனைவி இந்திராணி முகர்ஜி. கடந்த 2015-ம் ஆண்டு இந்திராணியின் கார் டிரைவர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்தபோது, இந்திராணி தன் மகள் ஷீனா போராவை காரில் கடத்திச் சென்று, தன் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா உதவியுடன் கொலைசெய்து மும்பை அருகே எரித்ததாகத் தெரிவித்தார். அதனடிப்படையில் இந்திராணிக் கைது செய்யப்பட்டார். சஞ்சீவ் கன்னாவும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்து வந்தது. இந்திராணியின் மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜியும் பின்னர் கைது செய்யப்பட்டார்.

சி.பி.ஐ நடத்திய விசாரணையில் இந்திராணிக்கும், முதல் கணவருக்கும் பிறந்த ஷீனா போராவை தன் மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜி, அவர் மகன் ராகுல் ஆகியோரிடம் தன்னுடைய சகோதரி என்று அறிமுகம் செய்தார். நாளடைவில் ராகுலுக்கும், ஷீனாபோராவுக்கும் காதல் ஏற்பட்டது. இதனால் கொதித்துப்போன இந்திராணி தன் மகளிடம் காதலைக் கைவிடச்சொல்லிப் பார்த்தார். ஆனால், ஷீனா போரா கேட்கவில்லை. இதனால் தன் மகளை இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னாவின் துணையோடு கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

கொலை

ஆனால், தன் மகள் அமெரிக்காவில் இருப்பதாக இந்திராணி தெரிவித்தார். கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இந்திராணி பல முறை ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதேசமயம் பீட்டர் முகர்ஜி கடந்த 2020-ம் ஆண்டு ஜாமீன் பெற்றார். இந்த நிலையில், இந்திராணி ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் கொடுக்க சி.பி.ஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மிகவும் கொடூரமாக தன் மகளைக் கொலைசெய்திருப்பதால் ஜாமீனில் விடக்கூடாது என்றும், சமூகத்தில் பிரபலமான நபராக இருப்பதால் சாட்சிகளைக் கலைத்துவிடுவார் என்றும் வாதிட்டது.

இந்திராணி - மகள் ஷீனா போரா

இந்த நிலையில், இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று இந்திராணிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய பீட்டர் முகர்ஜி ஜாமீனில் இருப்பதாலும், ஏற்கெனவே 6 ஆண்டுகள் சிறையிலிருந்துவிட்டதாலும், வழக்கு விசாரணை இப்போதைக்கு முடிய வாய்ப்பு இல்லை என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டிருக்கின்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/UDCSxTH

Post a Comment

0 Comments