காங்கிரஸிலிருந்து விலகிய கபில் சிபல்... சமாஜ்வாடி ஆதரவைப் பெற்றது எப்படி... இனி `ஜி-23' என்னவாகும்?!

கட்சியை மறுசீரமைப்பு செய்வதற்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மூன்று நாள்கள் (மே 13-15) `சிந்தனை அமர்வு' என்ற பெயரில் மாநாடு ஒன்றை நடத்தியது காங்கிரஸ் தலைமை. அந்த மாநாடு முடிந்து சில தினங்களே ஆன நிலையில், இரண்டு முக்கியத் தலைவர்களை இழந்திருக்கிறது அந்தக் கட்சி. கடந்த வாரம் குஜராத் மாநிலக் காங்கிரஸின் இளம் தலைவரான ஹர்திக் படேல் கட்சியிலிருந்து விலகினார். மே 25 அன்று காங்கிரஸின் மூத்த தலைவர்களுள் ஒருவரான கபில் சிபல் கட்சியிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்தார். ஜி-23 குழுவில் முக்கியத் தலைவராகச் செயல்பட்டுவந்த இவர் காங்கிரஸிலிருந்து விலகியிருப்பது தேசிய அரசியலில் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

மாநிலங்களவை எம்.பி தேர்தலில் கபில் சிபல்?

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய கபில் சிபல், எதிர்வரும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் ஆதரவில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். மே 25 அன்று, உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் கபில் சிபல். சுயேச்சையாகப் போட்டியிடும் இவருக்கு முழு ஆதரவு தருவதாக அறிவித்திருக்கிறது சமாஜ்வாடி கட்சி. காங்கிரஸிலிருந்து விலகியது குறித்துப் பேசிய சிபல், ``நான் மே 16-ம் தேதியே காங்கிரஸிலிருந்து விலகிவிட்டேன். இனிமேல் நாடாளுமன்றத்தில் ஒரு சுதந்திரமான குரலாக ஒலிப்பேன். இனி எந்தக் கட்சியின் வாலாகவும் நான் இருக்கமாட்டேன். 2024 பொதுத் தேர்தலில், பா.ஜ.க-வுக்கு எதிராகக் காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில் திரட்ட முதல் ஆளாக வந்து நிற்பேன்!'' என்று கூறியிருக்கிறார்.

கபில் சிபல், அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாடி ஆதரவு கிட்டியது எப்படி?

2017-ல் அகிலேஷ் யாதவுக்கும் அவரின் தந்தை முலாயம் சிங் யாதவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கட்சி இரண்டானது. அந்தச் சமயத்தில், கட்சியின் சின்னம் யாருக்குச் சொந்தம் என்று தேர்தல் ஆணையத்தில் நடந்த விசாரணையில் அகிலேஷுக்கு ஆதரவாக வாதாடினார் மூத்த வழக்கறிஞரான கபில் சிபல். அதே போல, சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரான அசாம் கான் சம்பந்தப்பட்ட வழக்கில், அவருக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடியதும் கபில் சிபல்தான். கடந்த காலங்களில் கபில் சிபல், பல சமயங்களில் அகிலேஷுக்கு துணை நின்றதால்தான், அவருக்கு சமாஜ்வாடி கட்சி ஆதரவு தந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஜி-23 குழு என்றால் என்ன... அந்தக் குழு இனி என்னவாகும்?

2020 ஆகஸ்ட் மாதத்தில், கட்சி செயல்பாடுகள்மீது அதிருப்தியிலிருக்கும் 23 காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றிணைந்து கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினர். அந்தக் கடிதத்தில் கட்சியைச் சீரமைக்க பல்வேறு பரிந்துரைகள் சொல்லப்பட்டிருந்தன. கடிதம் எழுதிய 23 தலைவர்கள் அடங்கிய குழுதான் `ஜி-23' என்றழைக்கப்பட்டது. இந்தக் குழுவில் கபில் சிபல், குலாம் நபி ஆசாத், புபேந்திர சிங் ஹூடா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இந்தக் குழுவிலிருந்த முக்கியத் தலைவர்களான ஜிதின் பிரசாதாவும், யோகானந்த் சாஷ்திரியும் கடந்த ஆண்டே கட்சியிலிருந்து விலகிவிட்டனர். ஜிதின் பிரசாதா பா.ஜ.க-விலும், யோகானந்த் தேசியவாத காங்கிரஸிலும் இணைந்துவிட்டனர். அதே நேரத்தில், ஜி-23 குழுவில் சசி தரூர், மணிசங்கள் ஐய்யர், முகமது அலிகான் உள்ளிட்ட சில தலைவர்கள் புதிதாகச் சேர்ந்துகொண்டனர். இந்த நிலையில்தான், ஜி-23 குழுவில் அதிரடியாகச் செயல்பட்டுவந்த கபில் சிபல் காங்கிரஸிலிருந்து விலகியிருக்கிறார். அவர் விலகிய பிறகு ஜி-23 குழு என்னவாகும் என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.

கபில் சிபல்

இது குறித்துப் பேசும் தேசிய அரசியல் பார்வையாளர்கள், ``ஜி-23 குழுவிலிருந்த தலைவர்களிலேயே கட்சித் தலைமைமீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் கபில் சிபல்தான். இரண்டு மாதங்களுக்கு முன்பாகக்கூட `காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கட்சியின் தலைமை பொறுப்பிலிருக்கக் கூடாது' என்று வெளிப்படையாக விமர்சித்திருந்தார். இந்தக் குழுவிலுள்ள மற்ற தலைவர்கள், பல்வேறு விஷயங்களிலும் மாறுபட்ட கருத்துகளுடன் இருப்பதாகத் தெரிகிறது. மேலும், ஜி-23 குழு ஆரம்பிக்கப்பட்டபோது இருந்த தலைவர்களில், கபில் சிபல் உள்பட மூன்று தலைவர்கள் கட்சியிலிருந்தே விலகிவிட்டனர். இதற்குப் பின்னரும், அந்தக் குழுவிலிருக்கும் சில தலைவர்கள் கட்சியைவிட்டு விலகினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எனவே, ஜி-23 குழு இனி நீர்த்துப்போகும் என்றே தோன்றுகிறது'' என்கிறார்கள்.



from தேசிய செய்திகள் https://ift.tt/DGmjhCU

Post a Comment

0 Comments