`விஜய் சேதுபதியுடன் செல்ஃபி, மரத்தடியில் சாப்பாடு..!' - அனுபவம் பகிரும் டாக்டர் ஃபாத்திமா

`உடலில் எந்தக் குறைபாடு இருந்தாலும் அதை மனதில் சுமக்கக் கூடாது!' என்பார்கள். அதற்கு ஆகச்சிறந்த உதாரணம், கேரளாவைச் சேர்ந்த ஃபாத்திமா. அடிக்கடி எலும்பு முறிவை ஏற்படுத்தும் `ஆஸ்டியோஜெனெஸிஸ் இம்பெர்ஃபெக்டா' என்ற அரிய வகை நோய் பாதிப்பு கொண்ட இவருக்கு, பலமான காற்றடித்தால்கூட கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்படலாம். இதுவரை 50 முறைக்கும் மேல் எலும்பு முறிவு ஏற்பட்டு, பலமுறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, ஃபாத்திமாவின் உடலின் பெரும்பாலான இடங்களிலும் இரும்புத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

விஜய் சேதுபதியுடன் ஃபாத்திமா, ஃபிரோஸ்

இவ்வளவு பெரிய வேதனையையும் சகஜமாக ஏற்றுக்கொண்டு, மகிழ்ச்சியான வாழ்க்கைக்குப் பழகிய ஃபாத்திமா, மருத்துவராக உயர்ந்திருப்பது மதிப்புக்குரிய சாதனை. இவரிடம் சில நிமிடங்கள் உரையாடினால், எவருக்கும் வாழ்க்கை மீதான நன்னம்பிக்கை கூடும். வலிகளைத் தாண்டி வலிமையைப் பெற்ற தனது தன்னம்பிக்கை கதையை, சமீபத்தில் அவள் விகடன் பேட்டியில் கூறியிருந்தார் ஃபாத்திமா. அதில், ``நடிகர் விஜய் சேதுபதியின் பெரிய ரசிகை நான். அவரை நேர்ல சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சா ரொம்பவே சந்தோஷப்படுவேன். அந்த தினத்துக்காக ஆவலுடன் காத்திருக்கேன்" என்று எதிர்பார்ப்புடன் கூறியிருந்தார்.

நியாயமான ஆசைகள் அனைத்தும் சாத்தியமானவைதானே? விஜய் சேதுபதியுடன் ஃபாத்திமாவைச் சந்திக்க வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம். விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளத்துடன் `காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் தயாராகிவருகிறது. அந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. படப்பிடிப்புத் தளத்துக்கு வருமாறு விஜய் சேதுபதி தரப்பிலிருந்து அழைப்பு வந்தது. இதற்காக, தனது குடும்பம் சகிதமாக, கேரளாவிலிருந்து பெரும் எதிர்பார்ப்புடன் சென்னை வந்திருந்தார் ஃபாத்திமா.

விஜய் சேதுபதியுடன் ஃபாத்திமா, ஃபிரோஸ்

நயன்தாரா, சமந்தா மற்றும் முக்கிய கதாபாத்திரங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கும் பணியில், இயக்குநர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட படக்குழுவினர் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் கேரவனிலிருந்து இறங்கி வந்தார் விஜய் சேதுபதி. அவரைக் கண்டதும் பரவசத்தில் திக்குமுக்காடிப்போனார் ஃபாத்திமா.

அனைவரையும் வரவேற்று உபசரித்த விஜய் சேதுபதி, ஃபாத்திமா மற்றும் அவரின் குடும்பத்தினருடன் வெகுநேரம் உரையாடினார். ஃபாத்திமாவின் உடல்நிலையைக் கேட்டறிந்து ஆச்சர்யமானார். பின்னர், மரத்தடியில் அமர்ந்து அவர்களுடன் இணைந்து மதிய உணவு சாப்பிட்டார். ``உங்களையெல்லாம் சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம். இவ்ளோ அன்பு கிடைக்கிறதுக்கு நான் கொடுத்து வெச்சிருக்கணும்" என்று அன்பில் உருகிய விஜய் சேதுபதி, ஃபாத்திமாவையும் அவரின் கணவர் ஃபிரோஸையும் உள்ளன்புடன் பாராட்டினார். பின்னர், அவர்களின் விருப்பத்தை ஏற்று செல்ஃபி எடுத்துக் கொடுத்தவர், அனைவரையும் வழியனுப்பி வைத்த பின்னர், படப்பிடிப்பில் பிஸியானார்.

விஜய் சேதுபதியுடன் ஃபாத்திமா குடும்பத்தினர்

ஓடியாடி விளையாட முடியாமல், விரும்பிய இடங்களுக்குச் செல்ல முடியாமல், இயல்பாகத் தூங்க முடியாமல்... இதுபோல ஃபாத்திமாவுக்கு முடியாமல் போன விஷயங்கள் ஏராளம். `இழப்பதெல்லாம் மற்றொன்றை அடையவே' என்பதுபோல, இப்போதுதான் ஃபாத்திமாவின் வாழ்க்கையில் மகிழ்ச்சி துளிர்க்கிறது. அதில், விஜய் சேதுபதியுடனான சந்திப்பு, ஃபாத்திமாவுக்கு என்றென்றும் நினைவுகூரத்தக்க மகிழ்ச்சித் தருணமாக அமைந்தது. அந்தச் சந்திப்புக்குப் பிறகு, கணவர் ஃபிரோஸுடன் இணைந்து பேசிய ஃபாத்திமா, தனது பாசிட்டிவிட்டியை நமக்கும் கடத்தினார்.

``எனக்கிருக்கிற இந்த பாதிப்பு உடையவங்களுக்கு எலும்புல பலம் ரொம்பவே குறைவா இருக்கும். உதாரணத்துக்குச் சொல்லணும்னா, முட்டை ஓடு மாதிரிதான் என்னோட எலும்பும் பலவீனமானது. இப்போ பரவாயில்ல. நான் குழந்தையா இருந்தபோது வேகமா தும்மல் வந்தாகூட கீழ விழுந்துடுவேன். உடனே சில எலும்புகள் உடைஞ்சுடும் அல்லது நொறுங்கிடும். ஆஸ்பத்திரிக்கு என்னைத் தூக்கிட்டுப் போகும்போதுகூட எலும்புகள் உடையும். அதனால, அப்பல்லாம் என்னைத் தொடவும், தூக்கவும்கூட குடும்பத்தினர் பயப்படுவாங்க. எலும்பு உடையும்போதும் வலி ஏற்படும்போதும் மட்டும்தான் வருத்தப்படுவேன். மத்த நேரங்கள்ல வருத்தத்துக்கு இடமில்லாத வகையில வீல்சேர் வாழ்க்கைக்கு என் மனசைத் திடப்படுத்திகிட்டேன்" - மனஉறுதியால் தன்னைப் பலப்படுத்திக்கொண்ட விதத்தை அழகாக விவரித்தார்.

விஜய் சேதுபதியுடன் ஃபாத்திமா, ஃபிரோஸ்

``குடும்பத்தினருக்கு அடுத்தபடியா என் வாழ்க்கையில டாக்டர்களோடுதான் அதிகமா நேரம் செலவிட்டிருக்கேன். அவங்களோட அர்ப்பணிப்பு கொண்ட வேலை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால நானும் டாக்டராக ஆசைப்பட்டேன். `உன்னாலயெல்லாம் டாக்டராக முடியாது’னு ஆரம்பத்துல பலரும் ஏளனம் பேசினாங்க. ஆனாலும், என் முயற்சியை நான் கைவிடலை. மெடிசின் படிக்க முதன்முறை நுழைவுத்தேர்வு எழுதி செலக்ட் ஆகி, கலந்தாய்வுக்கு வீல்சேர்ல போனேன். உடல்நிலையைக் காரணம் காட்டி எனக்கு சீட் தர மறுத்துட்டாங்க. அப்புறமா மறுபடியும் நுழைவுத்தேர்வு எழுதினேன். கடுமையான வலியைப் பொறுத்துகிட்டு, கலந்தாய்வுக்கு வாக்கர்ல மெதுவா நடந்துபோனேன். அதுக்கப்புறமாதான் எனக்கு சீட் கிடைச்சது" என்பவர், ஹோமியோபதி மருத்துவப் படிப்பை முடித்து, கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றிவருகிறார். `நிலாவைப் போலே சிரிக்கும் பெண் குழந்தை' என்ற நூலை எழுதியுள்ள ஃபாத்திமா, தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும் நம்பிக்கையூட்டுகிறார்.

`மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்பார்கள். அதுபோலவே, `கணவன் அமைவதும் இறைவன் கொடுத்த வரமே' என்பதற்கு உதாரணமாய், ஃபாத்திமாவுக்குக் கிடைத்த வாழ்க்கைத்துணை ஃபிரோஸ். நள்ளிரவு `சாட்'டில் மலர்ந்த தங்கள் காதல் குறித்துப் பகிர்ந்த ஃபெரோஸின் முகத்தில் வெட்கம் `பளிச்'சென எட்டிப்பார்த்தது. ``இரவு நேரத்துல `சாட்' பண்றதுக்குனு எங்க நண்பர்கள் வட்டாரத்துல ஒரு வாட்ஸ்அப் குரூப் வெச்சிருந்தோம். சினிமா, கவிதை, ஜோக்ஸ்னு அந்த குரூப் ராத்திரி நேரத்துல களைகட்டும். அப்படித்தான் எங்களுக்குள்ள நட்பு வளர்ந்துச்சு. ரசனை, எதிர்பார்ப்பு, வாழ்க்கைக்கான தெளிவுன்னு எங்க ரெண்டு பேரின் எண்ணமும் ஒரே அலைவரிசையில இணைஞ்சது.

ஃபாத்திமா - ஃபிரோஸ்

`நிலாவைப் பார்க்கும்போதெல்லாம் உன் சிரித்த முகம்தான் என் நினைவுக்கு வரும்'னு ஒருமுறை நான் மெசேஜ் அனுப்ப, ஃபாத்திமா இம்ப்ரெஸ் ஆகிட்டாங்க. எங்க ரெண்டு பேர் குடும்பத்தினரும் முற்போக்கா யோசிப்பாங்க. அதனால, எங்க காதலுக்கு சீக்கிரமே ஆதரவு கிடைச்சது" என்னும் ஃபிரோஸ், ``ஃபாத்திமா மேல எனக்கு இதுவரை அனுதாபம் வந்ததில்லை. மாறா, ஃபாத்திமா மேல மென்மேலும் மதிப்பு கூடிட்டே போகுது" என்று பெருமிதத்துடன் கூறுகிறார்.

மாற்றுத்திறனாளிகள், தங்கள்மீதான மற்றவர்களின் அனுதாபப் பார்வையை விரும்ப மாட்டார்கள். அந்த மாற்றம் மொத்த சமூகத்திலும் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஃபாத்திமா, ``எல்லோரையும்போலத்தான் நாங்களும். நாம நார்மலா இருக்கிறதும், அப்நார்மலா இருக்கிறதும் உடலமைப்பைப் பொருத்ததா இல்லாம, எண்ணத்தைப் பொருத்ததா இருக்கணும்.

ஃபாத்திமா

நம்ம உடலமைப்பு எப்படி இருந்தாலும் அதைப் பத்தி கவலை வேண்டாம். ஆன்மா போன பிறகு, நம்ம உடல் கடைசியில எரியூட்டப்படும் அல்லது மண்ணுல கலந்து மட்கும். அதனால, ஆன்மாதான் உடலுக்கு அழகே தவிர உருவமல்ல!

மனசுல குறைபாடு இல்லாம இருந்தா, யார் எந்த நிலையில இருந்தாலும் நம்பிக்கையுடன் ஜெயிக்க முடியும். `ஐயோ பாவம்'னு யாரையும் பரிதாபமா பார்க்காம, எல்லா மனிதர்களையும் ஒரே கண்ணோட்டத்துல அணுகுவோம்.

மத்தவங்களோட பார்வையைப் பத்தி நான் கண்டுக்க மாட்டேன். என்னைச் சரியா புரிஞ்சுக்கிட்ட குடும்பம், நண்பர்கள், கணவர்னு எல்லாமே நல்லபடியா அமைஞ்சிருக்கு. ஐ’ம் வெரி ப்ளெஸ்டு!" என்று உறுதியுடன் முடிக்க, அதை ஆமோதித்துச் சிரிக்கிறார் ஃபிரோஸ்.

அவள் விகடனில் வெளியான ஃபாத்திமாவின் விரிவான பேட்டியைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.



from தேசிய செய்திகள் https://ift.tt/HjGob8w

Post a Comment

0 Comments