பெண்கள் கருத்தடைக்கு பலவிதமான வழிகளைப் பின்பற்றினாலும், தற்காலிக கர்ப்ப தடைக்கு காப்பர் டி பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. மேலும், ஊசி மூலம் செலுத்திக்கொள்ளும் கர்ப்பத்தடை மருந்தும் கிடைக்கிறது. மும்பையில் பெண்கள் எந்த மாதிரியான கருத்தடை சாதனங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து புள்ளி விவரங்களை, மும்பை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட கருத்தடை சாதனங்கள் குறித்து வெளியிடப்பட்ட அந்தத் தரவில், கடந்த ஓர் ஆண்டில் மட்டும், பெண்கள் தற்காலிக கருத்தடைக்கு ஊசி போட்டுக்கொள்வது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
மேலும், ' 'அந்தாரா' என்ற பெயரில் கிடைக்கும் கர்ப்பத்தடை ஊசியின் பயன்பாடு ஒரே ஆண்டில் மூன்று மடங்கு அதிகரித்து இருக்கிறது. கடந்த ஓர் ஆண்டில் 15,287 பெண்கள் இதனை பயன்படுத்தி இருக்கின்றனர். 'அந்தாரா'வின் பயன்பாடு அதிகரித்தாலும், பெண்கள் வழக்கமாகப் பயன்படுத்தி வரும் காப்பர் டி கருத்தடை சாதனத்திற்குப் பெண்கள் மத்தியில் இன்னும் வரவேற்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மும்பை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் மங்களா கூறுகையில், 'கருத்தடைக்கு காப்பர் டி பயன்பாடு பழைய முறையாக இருந்தாலும், அது பெண்களுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. அதோடு இது நீண்ட காலத் தீர்வாகவும் இருக்கிறது. ஆனால் 'அந்தாரா' ஊசியை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செலுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இது தொடர்பான கால இடைவெளியை பெரும்பாலான பெண்களால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடிவதில்லை. எனவேதான் அதிகமான பெண்கள் காப்பர் டி முறையையே அதிக அளவில் பின்பற்றி வருகின்றனர்' என்று தெரிவித்தார்.
மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையின் செயற்கை கருத்தரிப்பு பிரிவு டாக்டர் ஆர்த்தி இது குறித்து கூறுகையில், 'ஈஸ்ட்ரோஜனை கொண்ட கருத்தடை சாதனங்கள் பயன்பாடுகளில் புற்றுநோய்க்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கிறது. எனவேதான் 'அந்தாரா' இன்ஜெக்ஷன் பயன்பாடு குறைவாக இருக்கிறது. ஆனால் காப்பர் டி ஓர் இயந்திரம் போல் செயல்படுகிறது. பெண்களுக்கு அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் சாதனமாகவும் செயல்படுகிறது. எனவேதான் காப்பர் டி பெண்களின் விருப்பமான ஒன்றாக இருக்கிறது. அதோடு ஒரு முறை பொருத்திவிட்டால் 5 ஆண்டுகளுக்கு கவலை இல்லை. ஆனால் ஊசி மூலம் செலுத்தப்படும் கருத்தடை மருந்தால் மாதவிடாயில் பிரச்னை ஏற்படுகிறது' என்று தெரிவித்தார்.
மும்பை மாநகராட்சி நிர்வாகம் கடந்த 2017-ம் ஆண்டு 'அந்தாரா'வை அறிமுகம் செய்தது. மாநகராட்சி நிர்வாகம் அதன் பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. மும்பை மாநகராட்சி மருத்துவமனைகளில் இந்த மருந்து இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. இம்மருந்து எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட்டால் 7 முதல் 10 மாதத்தில் பெண்கள் மீண்டும் கருத்தரிக்க முடியும். அதோடு பக்க விளைவு எதுவும் இல்லாதது என்று மாநகராட்சி குடும்பக் கட்டுப்பாடு பிரிவு டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.
இன்னொரு பக்கம், கருத்தடை சிகிச்சைகள் பெண்களுக்கேயான பொறுப்புபோல, ஆண்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்வதில் காட்டும் தயக்கம் இங்கு குறிப்பிடத்தக்கது.
from தேசிய செய்திகள் https://ift.tt/i5hPz8n
0 Comments