உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூர் மாவட்டத்தில் உள்ள அலிகஞ்ச் என்ற இடத்தில் மின்வாரிய ஊழியராகப் பணியாற்றி வந்தவர் கோகுல் பிரசாத்(45). இவரது வீடு அதிக தூரத்தில் இருந்ததால் பணிக்குச் சென்று வருவதில் சிரமம் இருந்தது. இதனால் தன்னை தனது ஊருக்கு அருகில் உள்ள ஊருக்கு இடமாற்றம் செய்து கொடுக்கும்படி, ஜூனியர் இஞ்சினீயர் நாகேந்திர குமாரிடம் கேட்டார். ஆனால் அவர் பணியிட மாற்றம் கொடுக்க மறுத்து வந்தார். இந்நிலையில் தான் பணியாற்றிய அலுவலகத்திற்கு வெளியில் கோகுல் திடீரென தனது உடலில் டீசல் ஊற்றி தீவைத்துக்கொண்டார். அவர் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்குப் போராடிய நிலையில் அவர் போலீஸாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது வாக்குமூலத்தில், 'ஜூனியர் இஞ்சினீயர் நாகேந்திர குமாரும் அவரின் உதவியாளரும் சேர்ந்து என்னை தொடர்ந்து சித்ரவதை செய்து வந்தனர்.
இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தும் எந்த பயனும் இல்லை. எனது ஊரில் இருந்து பணிக்கு வந்து செல்ல மிகவும் சிரமமாக இருந்தது. எனவே எனது ஊருக்கு அருகில் இடமாற்றம் செய்து கொடுக்கும்படி கேட்டேன். ஆனால் அதற்கு, 'பணியிட மாற்றம் வேண்டுமென்றால் ஒரு நாள் இரவுக்கு உன் மனைவியை எனக்கு அனுப்பி வை' என்று நாகேந்திர குமாரும், அவரின் உதவியாளரும் என்னிடம் கேட்டனர். இதனால் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்ய முடிவு செய்தேன்' எனத் தெரிவித்தார்.
கோகுல் கொடுத்த வாக்குமூலம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியிருக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோகுல் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் மாநில மின்சார வாரியம் நாகேந்திர குமாரையும், அவரின் உதவியாளரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு இருக்கிறது.
இது குறித்து லகிம்பூர் எஸ்.பி.சஞ்சீவ் கூறுகையில், 'தற்கொலை செய்து கொண்டவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தற்கொலைக்குத் தூண்டியதாக நாகேந்திர குமார் மீதும், கிளார்க் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
கோகுல் மனைவியும் இது தொடர்பாக தனியாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், 'என் கணவரை நாகேந்திர குமார் கடந்த மூன்று ஆண்டுகளாக சித்ரவதை செய்து வந்தார். இதனால் என் கணவர் மன அழுத்தத்திற்கு ஆளாகி சிகிச்சையும் எடுத்துக்கொண்டார். எங்கள் ஊருக்கு அருகில் பணியிட மாற்றம் செய்யும்படி என் கணவர் கேட்டதற்கு, ஒரு நாள் இரவு உன் மனைவியை அனுப்பி வை என்று அவரிடம் கூறியுள்ளனர். அதனால்தான் என் கணவர் தற்கொலை செய்துகொண்டார்' என்று தெரிவித்துள்ளார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/lPh7Nna
0 Comments