நாட்டில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை அதிகரித்து வருவதால் சி.என்.ஜி-யில் இயங்கும் ஆட்டோக்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. மும்பையில் பெரும்பாலான ஆட்டோக்கள் சி.என்.ஜி.யில்தான் இயக்கப்படுகிறது. சமீப காலமாக மும்பையில் சி.என்.ஜி.யில் இயக்கப்படும் ஆட்டோக்கள் அடிக்கடி காணாமல் போனது. இது குறித்து போலீஸாருக்கு ஏராளமான புகார்கள் வந்தவண்ணம் இருந்தது. இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் மும்பையில் திருடப்படும் ஆட்டோக்கள் அதிக அளவில் கர்நாடகாவுக்கு கடத்தப்படுவது தெரிய வந்தது.
சி.என்.ஜி.ஆட்டோக்களை இயக்குவதால் செலவு குறைவு என்பதால் மும்பையில் தனியாக நிறுத்தப்பட்டு இருக்கும் ஆட்டோக்களை திருடிச்சென்று கர்நாடகாவில் ஒரு கும்பல் விற்பனை செய்து வந்தது. இது குறித்து மும்பை மால்வானி போலீஸ் நிலைய மூத்த அதிகாரி கூறுகையில், ``மும்பையில் ஆட்டோ டிரைவர்கள் இரவு நேரங்களில் தங்களது ஆட்டோவை ரயில் நிலையத்திற்கு அருகில் விட்டுச்செல்வது வழக்கம். இது போன்று விட்டுச்செல்லப்படும் ஆட்டோக்களை திருடர்கள் தொடர்ச்சியாக இரண்டு நாள்கள் கண்காணித்து அதனை திருடுவர். பின்னர் டிரைவர் ஒருவருக்கு பணம் கொடுத்து கர்நாடகா எல்லையில் இருக்கும் அக்கல்கோட் என்ற இடத்துக்கு ஆட்டோவை ஓட்டி வரும்படி கேட்டுக்கொள்வர். அங்கிருந்து கர்நாடகாவின் குல்பர்காவிற்கு இரண்டு மணி நேரத்தில் ஆட்டோவை கொண்டுசெல்ல முடியும். ஆட்டோக்களை திருடும் கும்பல் குல்பர்காவில் ஆட்டோ நம்பர் பிளேட்டை மட்டும் மாற்றி விற்பனை செய்துவிடுகின்றனர்” என்று தெரிவித்தார்.
ஆட்டோக்கள் கர்நாடகாவுக்கு கடத்தப்படுவது குறித்து தெரிந்தவுடன் சப் இன்ஸ்பெக்டர் ஹசன் முலானி தலைமையில் தனிப்படை போலீஸார் குல்பர்காவிற்கு விரைந்தனர். அவர்கள் ஆட்டோ திருடில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மொகமத் ஆசிப் ஹனிப் மற்றும் லட்சுமி காந்த் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இத்திருட்டில் தொடர்புடைய பலர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 8 திருட்டு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதன் மூலம் 14 வழக்குகளில் துப்பு துலக்கி இருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/p20ct5j
0 Comments