ஆந்திரா மாநிலம், குண்டூர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்துவந்திருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் அந்த சிறுமியின் தாயார் கொரோனா பாதிப்பு காரணமாக குண்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுமியின் தாயார் உயிரிழந்தார். இந்த நிலையில்தான், மருத்துவமனையில் சிறுமியின் தாயுடன் நட்புடன் பழகிவந்த சொர்ணகுமாரி என்ற மருத்துவமனை பணியாளர், சிறுமியைத்தான் தத்தெடுத்து வளர்த்துக் கொள்வதாகக் கேட்டிருக்கிறார்.
சிறுமியின் தந்தையும், அவர் மகளை சொர்ணகுமாரியிடம் ஒப்படைத்துள்ளார். ஆனால், அந்த மருத்துவமனை பெண் ஊழியரோ ஹைதராபாத், விஜயவாடா, காக்கிநாடா, நெல்லூர் போன்ற பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அந்த சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். கடந்த சில மாதங்களாகச் செய்வதறியாது அந்த கொடூர கும்பலிடம் சிக்கித் தவித்திருக்கிறார் சிறுமி. பின்னர், ஒருவழியாக அந்த இடத்திலிருந்து தப்பித்து தன் தந்தையிடம் வந்து சேர்த்திருக்கிறார்.
சிறுமி தந்தையிடம் தனக்கு நடந்த கொடுமைகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த அவர் குண்டூர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முதற்கட்டமாக சொர்ணகுமாரி உட்பட 21 பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, மொத்தம் 80 பேரைக் குற்றவாளிகளாக காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். 13 வயது சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தெலங்கானா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 61 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். மேலும் இந்த குற்றத்தில் தொடர்புடைய 10 பேரை குண்டூர் காவல்துறையினர் கைது செய்தனர். இதுவரை 74 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், மீதமுள்ள ஆறு பேரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
from தேசிய செய்திகள் https://ift.tt/TFhvBuS
0 Comments