மும்பை: நள்ளிரவில் மொரிசியஸ் பிரதமர் வாகனத்தின் குறுக்கே குடிபோதையில் காரை ஓட்டிய இருவர் கைது!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மொரிசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் நேற்று இரவு மும்பை வந்தார். அவர் அதிகாலை 1.50 மணிக்கு மும்பை மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையிலிருந்து பாந்த்ரா-ஒர்லி கடல் பாலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து அவருடன் வந்தவர்களின் கார்களும் வரிசையாகச் சென்றன. மொரீசியஸ் பிரதமரின் வாகனம் செல்வதற்காகப் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸார் இதர வாகனங்களைத் தடுத்து நிறுத்தினர். அப்போது, கார் ஒன்றில் இருந்த இரண்டு பேர் தொடர்ந்து ஹார்ன் அடித்துக்கொண்டே இருந்தனர். அதோடு மொரீசியஸ் பிரதமருடன் சென்ற வாகனங்களோடு சேர்ந்து செல்ல இரண்டு பேரும் முயன்றனர். அதைத் தடுக்க முயன்ற போலீஸ்காரரை காரில் இருந்தவர்கள் கண்டபடி திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மொரிசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத்

ஒருவர் நடந்த சம்பவத்தை அப்படியே தனது மொபைல் போனில் வீடியோ எடுத்தார். பிறகு இருவரும் காவலர் ஒருவர் மீது காரை ஏற்றவும் முயற்சி செய்தனர். அதைத் தொடர்ந்து, வலுக்கட்டாயமாக தங்களது காரை மொரீசியஸ் பிரதமருடன் சென்ற வாகனங்களுடன் ஓட்டிச்சென்றனர். இது குறித்து போலீஸார் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தனர். உடனே அனைத்து இடங்களிலும் செக்போஸ்ட்டுகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. அக்கார் பாந்த்ரா-ஒர்லி கடல் பாலத்தில் வந்தபோது காரில் இருந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.

கைது

அதையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இருவரும் மது அருந்தியிருந்தது தெரியவந்தது. போலீஸார் மேற்கொண்டு விசாரித்ததில், ஆகாஷ் அனில் சுக்லா(24), சந்தோஷ்(22) என்று தெரியவந்தது. குடிபோதையில் இது போன்று இருவரும் நடந்து கொண்டிருந்தனர். போலீஸார் அவர்கள் மீது கண்மூடித்தனமாக கார் ஓட்டியது, அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தது உட்படப் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், காலையில் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/6wrFP3y

Post a Comment

0 Comments