நாட்டின் இளம் மேயர் என்ற பெருமை கொண்டவர், திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன். தனது 21 வயதில் கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சமயத்தில், ஆர்யா ராஜேந்திரன் மேயராகப் பொறுப்பேற்றார். அவர் மேயர் ஆகி ஓர் ஆண்டு ஆகியுள்ள நிலையில், அவரது திருமண அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. கோழிக்கோடு மாவட்டம் பாலுசேரி தொகுதி எம்.எல்.ஏ சச்சின் தேவ்வை ஆர்யா திருமணம் செய்ய உள்ளார். சச்சின் தேவ், கேரள சட்டசபையின் இளம் எம்.எல்.ஏ.
ஆர்யா ராஜேந்திரன் சிறுமியாக இருந்தபோதே, சி.பி.எம் அமைப்பின் பால சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். படிப்படியாக பல பொறுப்புகளை வகித்தவர் பாலசங்கத்தின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்தார். பின்னர் மாணவர் சங்கமான எஸ்.எஃப்.ஐ மாநில கமிட்டி உறுப்பினராக ஆர்யா ராஜேந்திரன் பொறுப்பு வகித்துவருகிறார். அதுபோல சச்சின் தேவ், பால சங்கத்தில் இருந்தே சி.பி.எம் இயகத்தில் இருக்கிறார். எஸ்.எஃப்.ஐ மாநிலச் செயலாளராக இருக்கும் சச்சின் தேவ் கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு பாலுசேரி எம்.எல்.ஏ ஆனார்.
ஆர்யா மற்றும் சச்சின் தேவ் ஆகியோரின் திருமணம் குறித்து கடந்த மாதமே இரு வீட்டாரும் பேசி முடித்துவிட்டனர். ஆனால் திருமணத் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் கேரள மாநில சி.பி.எம் அலுவலகமான திருவனந்தபுரம் ஏ.கே.ஜி சென்டரில் ஆர்யா ராஜேந்திரன் மற்றும் சச்சின் தேவ் ஆகியோரின் நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது.
இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்களும், அமைச்சர்கள் வி.சிவன்குட்டி, வி.கே.பிரசாத் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். திருவனந்தபுரத்தில் மேயராக இருக்கும் ஆர்யா, கோழிக்கோடு மாவட்டத்தின் பாலுசேரி எம்.எல்.ஏ- சச்சின் தேவை திருமணம் செய்தால் மேயர் பணி செய்வது எப்படி என்ற கேள்வி இருந்து வந்தது. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஆர்யாவின் வருங்கால கணவர் சச்சின் தேவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``இப்போதைய சூழ்நிலையை கருத்தில்கொண்டு விரைவில் திருமணத் தேதியை முடிவுசெய்து அறிவிப்போம்.
இருவரும் மக்கள் பணிக்கான பொறுப்புகளை வகித்துவருகிறோம். அந்தப் பணியை செய்வதற்கு திருமணம் பிரச்னையாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. ஆர்யா அவரது பொறுப்பை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வார். எனது பொறுப்பை நான் கவனித்துக்கொள்வேன். நாங்கள் இருவரும் சி.பி.எம் கட்சி வழங்கிய பணியை நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் சிறப்பாகச் செயல்படுத்துவோம்" என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/NiEuVQk
0 Comments