மொபைல் போன்கள், சமூக வலைதளங்கள் ஹேக் செய்யப்படுவது இப்போது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டால் போனையோ அல்லது சிம்கார்டையோ மாற்றினால் பிரச்னை முடிந்துவிடும். ஆனால், மும்பையைச் சேர்ந்த ஒருவருக்கு எத்தனை முறை சிம் கார்டுகளை மாற்றினாலும் அவரது போன்கள் தொடர்ச்சியாக ஹேக் செய்யப்பட்டு வருகிறது.
மும்பை அருகில் உள்ள நவிமும்பை வாஷி பகுதியை சேர்ந்தவர் சந்தன் குமார். இவர் அந்தேரியை சேர்ந்த நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். சந்தனின் மொபைல் போனை ஒருவர் தொடர்ச்சியாக ஹேக் செய்து துன்புறுத்தி வருகிறார். கடந்த அக்டோபர் மாத இறுதியில் சந்தன் போனை ஹேக் செய்து அதில் இருக்கும் புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து சந்தனுக்கு மர்ம நபர் அனுப்பி வைத்தார். அத்துடன் சந்தனின் சமூக வலைதளக் கணக்குகளையும் மொபைல் போன் உதவியுடன் திறந்து அதில் இருக்கும் தகவல்களையும் தெரிந்து கொண்டார்.
சந்தன் போன் மட்டுமல்லாது சந்தனின் மனைவி போனையும் ஹேக் செய்துள்ளார். மர்ம நபர் எங்கிருந்து ஹேக் செய்கிறார் என்றே தெரியவில்லை. சந்தன் பெயரில் ஆஸ்திரேலியா, தாய்லாந்து, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் ஹோட்டல்களில் ரூம் புக்கிங் செய்து பில்லை சந்தனுக்கு அனுப்பினர்.
அதோடு சந்தன் பெயரில் அவர்களே மொபைல் போனில் ஆப் பதிவிறக்கம் செய்து கடன்களையும் சந்தன் பெயரில் விண்ணப்பித்துவிடுகின்றனர். திடீரென சில நேரங்களில் வீட்டிற்கு ஓட்டல்களில் இருந்து சாப்பாடு வரும். `நாங்கள் ஆர்டர் செய்யவில்லை' என்று சொன்னால் உங்களது போனில் இருந்துதான் ஆர்டர் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
சந்தன் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்று வந்தவர். அவரது மொபைல் போனில் இருக்கும் தொடர்பு எண்களை எடுத்து அவர்களிடம் பணம் கேட்டு மெசேஜ் அனுப்புவதை மர்ம நபர் வழக்கமாக கொண்டிருக்கிறார்.
நண்பர்களுக்கு தனது போன் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக கூறவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சந்தன் பல முறை போன் மற்றும் சிம்கார்டுகளை மாற்றிய போதும் எப்படியோ அதனையும் ஹேக் செய்துவிடுகின்றனர்.
ஹேக்கர்களால் சந்தன் ரூ.7 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்துள்ளார். இப்பிரச்னை தொடர்பாக சந்தன் போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண என் போன்களை யார் ஹேக் செய்கின்றனர் என்பதை கண்டுபிடிக்க சச்சின் ரஷ்தே என்ற நிபுணரை சந்தன் நியமித்தார். ஆனால் அவராலும் ஹேக்கர் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து சச்சின் கூறுகையில்,``ஹேக்கரைக் கண்டுபிடிப்பது மிகவும் சவாலாக இருக்கிறது'' என்று தெரிவித்தார்.
இவ்வழக்கை விசாரித்து வரும் தயானந்த் வனாவே இது குறித்து கூறுகையில், ``சந்தன் போனை யார் ஹேக் செய்கின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ள கூகுள், பேஸ்புக்கிற்கு கடிதம் எழுதி உதவி கேட்டுள்ளோம். போனை மாற்றிய பிறகும் எப்படி ஹேக் செய்கின்றனர் என்பது மர்மமாக இருக்கிறது'' என்று தெரிவித்தார்.
ஹேக்கர்களால் இப்படி எல்லாம் பிரச்னை வருமா என்று நினைத்தால், ஆச்சரியமாகத்தான் இருக்கிறது!
from தேசிய செய்திகள் https://ift.tt/GKpoPbA
0 Comments