உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் அங்கிருக்கும் இந்தியர்களை மீட்டு வரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது மத்திய அரசு. உக்ரைனில் இன்னும் நிறைய இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அதில் மருத்துவ மாணவர்களே அதிகம். உயிர் பிழைத்தால் போதும் என உக்ரைனில் இருந்து நாடு திரும்புபவர்கள் மத்தியில், உயிருக்கு உயிராகப் பழகிய வளர்ப்பு நாயைப் பிரிய மனம் இல்லாமல் போராடி ஊருக்கு அழைத்து வந்துள்ளார் இடுக்கியைச் சேர்ந்த ஆர்யா என்ற மாணவி.
உக்ரைன் தலைநகர் கியூவில் மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஆர்யா, ஊருக்குத் திரும்ப அனுமதி கிடைத்ததும் தன்னுடன் சைபீரியன் ஹஸ்கி இன நாயான சைராவையும் அழைத்து வந்தார். எப்படியும் சைராவை இந்தியா அழைது வந்துவிடவேண்டும் என்பதற்காக, அதற்குத் தேவையான ஆவணங்களை ஏற்கெனவே தயாராக்கி வைத்திருந்தார். மேலும் சைராவை தன்னுடன் அழைத்து வர அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோளும் விடுத்திருந்தார்.
ஒருவழியாகப் போராடி சைராவையும் அழைத்துக்கொண்டு விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார் ஆர்யா. பின்னர் அங்கிருந்து கேரள மாநிலம் வந்தார். தன்னுடன் சைராவை அழைத்துவந்தது குறித்து ஆர்யா கூறுகையில், ``நான் கல்லூரி சென்றுவிட்டு திரும்பி வரும்வரை சைரா எதுவும் சாப்பிடாமல் காத்திருப்பாள். போர்ச் சூழலில், அவளை டே கேர் சென்டரில் விட்டுவிட்டு வரமுடியாது. அங்கு விட்டுவிட்டு வரவும் எனக்கு மனது இல்லை. அனைவருடைய நல்ல மனம் காரணமாக ஊருக்கு அழைத்துவர முடிந்தது.
உக்ரைன் எல்லையில் பஸ்ஸில் இருந்து இறங்கி நடந்து ரொமானியா நாட்டு எல்லை நோக்கிச் சென்றபோது அங்கும் இங்குமாக சென்ற வாகனங்களைக் கண்டு சைரா பயந்தாள். வழியில் சைரா நடப்பதற்குத் தடுமாறியதால் எனது உடைகளையும், புத்தகங்களையும், உணவையும் அங்கே போட்டுவிட்டு சைராவை சுமந்துகொண்டு நடந்தேன். எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி" என்றார்.
ஆர்யா தனது வளர்ப்பு நாயான சைராவுடன் ஊர் திரும்பியதைபோல, அவரின் தோழியான அஞ்சு தனது வளர்ப்புப் பூனையான லோகியுடன் உக்ரைனில் இருந்து ஊருக்கு வந்துள்ளார். அஞ்சு கேரள மாநிலம் செங்கனூரைச் சேர்ந்தவர். ஆர்யாவும், அஞ்சுவும் ஒரே விமானத்தில் டெல்லி வந்தனர். வளர்ப்புப் பிராணிகளுடன் தங்களை இந்தியா வர அனுமதித்ததற்கு இருவரும் நன்றி தெரிவித்தனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/Dr6XJmA
0 Comments