தற்கொலை:
பெங்களூரு பிரபல தனியார் பத்திரிகை நிறுவனத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றிவந்தவர் சுருதி நாராயணன் (37). இவர் கேரளாவைச் சேர்ந்தவர். கடந்த 2017-ம் ஆண்டு சுருதிக்கும் கேரளாவைச் சேர்ந்த அனிஷ் கோயாடன் என்பவருக்கும் திருமணம் ஆனது. திருமணத்துக்குப் பின்னர் பெங்களூரூவில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருவரும் வாழ்ந்துவந்துள்ளார். திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆன நிலையிலும், இந்த தம்பதியினருக்குக் குழந்தை கிடையாது. இந்த நிலையில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை அன்று சுருதியின் அம்மாவும், அவரின் சகோதரரும் பலமுறை சுருதிக்குப் போன் செய்திருக்கின்றனர். ஆனால், சுருதி அழைப்பை ஏற்கவில்லை.
மேலும், கடந்த திங்கள் அன்று சுருதி வேலைக்கும் செல்லவில்லை. இதுவரை அப்படி அவர் இருந்ததில்லை என்பதால், செவ்வாய்கிழமை அன்று பெங்களூரூவில் வசிக்கும் சுருதியின் சகோதரர் நிஷாந்த் அவரின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று பார்த்தார். வீடு உள்பக்கம் பூட்டியிருந்ததால், குடியிருப்பு காவலாளிகள் உதவியுடன் பால்கனி கதவை உடைத்து வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் சுருதி தூக்கில் சடலமாகக் கிடந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை கடிதம்:
சுருதியின் அடுக்குமாடிக் குடியிருப்பில் மார்ச் 20 தேதியிட்ட மூன்று தற்கொலை கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் ஒரு கடிதம் தன் கணவருக்கும், ஒரு கடிதம் காவல்துறையினருக்கும் மற்றொன்று தன் பெற்றோருக்கும் சுருதி எழுதியிருந்திருக்கிறார். தன் பெற்றோருக்கு அவர் எழுதிய கடிதத்தில், ``நான் வாழ்ந்தால் இன்னும் பலவருடம் உங்களின் துன்பத்துக்கு நான் காரணமாக இருப்பேன். இறந்துவிட்டால் அந்த சோகம் சிலநாள்கள் மட்டுமே இருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல தன் கணவருக்கு எழுதிய கடிதத்தில், ``எனது வாழ்க்கையை நான் முடித்துக்கொள்ளப் போகிறேன். இதனால் இருவர் சந்தோசமாக இருப்பார்கள். ஒன்று நீங்கள் மற்றொன்று நான். இந்த சித்ரவதை வாழ்க்கையிலிருந்து தப்பிப்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் வாழ்க்கையில் நான் இல்லாததால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் மற்றொரு திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டால் காது கேட்காத, பார்வையற்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ளுங்கள். இல்லையென்றால் 20 நிமிடங்களுக்கு மேல் உங்களது சித்ரவதையை யாராலும் தாங்க முடியாது." என்று குறிப்பிட்டிருந்தார்.
போலீஸ் புகார்:
இந்த விவகாரம் குறித்து சுருதியின் சகோதரர் பெங்களூரு ஒயிட்ஃபீல்டு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரில், ``சுருதியை அவரின் கணவர் சித்ரவதை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் மீது சந்தேகப்பட்டு அவரை தொடர்ந்து துன்புறுத்தி வந்தார். அனிஷ் படுக்கை அறை உட்பட வீடு முழுவதும் கண்காணிப்பு கேமரா வைத்திருந்தார். கடந்த ஜனவரி மாதம் கூட அவர் சுருதியைக் கொலை செய்ய முயற்சி செய்திருந்தார்" என்று தன் சகோதரியின் கணவரின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அந்தப் புகாரில் அவர் தெரிவித்திருந்தார்.
சுருதி தற்கொலை செய்துகொள்வதற்கு முந்தைய நாளான மார்ச் 19-ம் தேதிதான் அனிஷ் கேரளாவுக்குச் சென்றிருக்கிறார். தற்போது அவர் எங்கே இருக்கிறார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக கேரளா காசர்கோடு நகரில் வசிக்கும் சுருதியின் தந்தை நாராயணன் பெரியா கேரளா காவல்துறையிலும் புகார் அளித்திருக்கிறார். கேரளா காவல்துறையினரும் இந்த தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரபல பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் கணவரின் சித்ரவதையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/7fq2yAR
0 Comments