மும்பை: 20 ஆண்டுகளில் 50 முறை சிறை சென்ற திருடன் மீண்டும் கைது... திருந்தப்போவதாக வாக்குமூலம்!

மும்பை மான்கூர்டு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் ஜெய்ஸ்வால்(42). தனது 20 வயதிலிருந்தே திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார். இது வரை மொத்தம் 50 முறை கைதாகி சிறைக்கு சென்று இருக்கிறார். தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை பைகுலா பகுதியில் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை தடுத்து நிறுத்திய ஜெய்ஸ்வால், `என்னை தெரிகிறதா?’ என்று கேட்டார். `நாம் இருவரும் பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்திருக்கிறோம்’ என்று பேச்சுக்கொடுத்தார். இதனால் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் ஜெய்ஸ்வாலை எங்கு சந்தித்தோம் என்று சிந்திக்க ஆரம்பித்தார். அந்நேரம், நட்பு முறையில், `நீங்கள் அணிந்திருக்கும் செயின் மிகவும் நன்றாக இருக்கிறது. நான் அதன் டிசைனை பார்க்கலாமா?’ என்று ஜெய்ஸ்வால் கேட்டார்.

கொள்ளை

உடனே ரியல் எஸ்டேட் ஏஜென்ட் செயினை கழற்றி ஜெய்ஸ்வாலிடம் கொடுத்தார். ஜெய்ஸ்வால் அந்த செயினை பார்த்துவிட்டு ரியல் எஸ்டேட் ஏஜென்ட் சட்டை பாக்கெட்டில் வைப்பதாக கூறி வைத்தார். பின்னர் அங்கிருந்து ஜெய்ஸ்வால் சென்றுவிட்டார். அவர் சென்ற பிறகு சட்டை பையை சோதித்த போது அங்கு செயின் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ரியல் எஸ்டேட் ஏஜென்ட் இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளி யார் என்பதை கண்டுபிடித்தனர்.

கைது

ஜெய்ஸ்வால் புகைப்படம் கிடைத்தவுடன் அனைத்து போலீஸ் நிலையத்துக்கும் அனுப்பி தேட ஆரம்பித்தனர். இறுதியில் மான்கூர்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு ஜெய்ஸ்வால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய போதுதான் அவர் 50 முறை சிறை சென்று இருப்பது தெரிய வந்தது. கடந்த 2-ம் தேதிதான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு இருந்தார். ஆனால் 8-ம் தேதியே திருட்டில் ஈடுபட்டுள்ளார். 2-ம் தேதியில் இருந்து 3 திருட்டில் ஈடுபட்டுவிட்டார். போலீஸ் விசாரணையில், `நான் இனி மேல் தவறுகள் செய்யமாட்டேன், திருந்தி வாழப்போகிறேன், சிறையில் இருந்து வெளியில் வர கடன் வாங்கினென். அந்த கடனை அடைக்கத்தான் திருட்டில் ஈடுபட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/yn6SeUd

Post a Comment

0 Comments