மும்பை கோரேகாவ் பிலிம்சிட்டியில் வேலை செய்து வருபவர் கண்ணன் முத்துசாமி(24). இவர் அதே பகுதியில் இருக்கும் மேம்பாலத்திற்கு கீழே குடிசை அமைத்து வாழ்ந்து வரும் 22 வயது இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். அவர்களின் காதலுக்கு பெண்ணின் தாயார் சம்மதிக்கவில்லை. இதற்காக அப்பெண்ணின் தாயாருடன் கண்ணன் வாக்குவாதமும் செய்தார். ஆனாலும் அவர் சம்மதிக்கவில்லை. இதனால் பெண்ணின் தாயார் மீது கண்ணன் கடும் கோபத்தில் இருந்தார். சம்பவத்தன்று அப்பெண்ணின் தாயார் தனது 7 மாத மகளுடன் (காதலியின் தங்கை) வீட்டில் படுத்திருந்தார். அதிகாலையில் அவர் எழுந்து இயற்கை உபாதையை கழிக்க சென்றார். வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை.
இதனால் அக்கம்பக்கம் தேடிப்பார்த்துவிட்டு இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர். குழந்தையின் தாயார் வசித்த வீட்டிற்கு அருகில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லை. எனவே அந்த வீட்டிற்கு அருகில் சம்பவம் நடந்த போது எந்தெந்த போன் நம்பர்கள் செயல்பாட்டில் இருந்தது என்ற விபரத்தை போலீஸார் சேகரித்தனர். அதோடு புகார் கொடுத்தவரின் வீட்டில் உள்ளவர்கள் போன் நம்பர்களை ஆய்வுசெய்த போது கண்ணன் பல முறை அங்குள்ள 22 வயது பெண்ணுக்கு போன் செய்து பேசியிருந்தார். உடனே கண்ணனை பிடித்து சென்று தீவிர விசாரணை நடத்திய போது குழந்தையை கடத்தி கொலை செய்து தண்ணீர் தொட்டி ஒன்றில் போட்டதாக தெரிவித்தார். தங்களது காதலுக்கு குழந்தையின் தாய் அனுமதிக்காததால் அவரை பழிவாங்கும் நோக்கில் இக்கொலையை செய்ததாக தெரிவித்துள்ளார். அவரை கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். கோரேகாவ் பிலிம்சிட்டி இருக்கும் ஆரே காலனி பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
from தேசிய செய்திகள் https://ift.tt/uxjP5Zg
0 Comments