மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகில் உள்ள பால்கர் மாவட்டத்தில் இருக்கும் போஸ்ரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வதி (65). பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பார்வதியும், அவர் கணவர் காசிநாத் (72) என்பவரும் வனப்பகுதிக்கு அருகில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். வீட்டுக்குப் பின்புறம் அவர்களின் தோட்டம் இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவில் பூனை கத்துவது போல் சத்தம் கேட்டிருக்கிறது. உடனே பார்வதி வீட்டுக்குப் பின்னால் சென்று பார்க்கச் சென்றிருக்கிறார். ஆனால், அங்கு பூனைக்குப் பதில் சிறுத்தை நின்று கொண்டிருந்தது. சிறுத்தை மூதாட்டியைக் கண்டதும் ஓடி வந்து அவரைத் தாக்கியது. உடனே அங்கிருந்து வீட்டுக்குள் ஓடி வர பார்வதி முயன்றார். ஆனால், சிறுத்தை பார்வதியின் கழுத்தை கவ்வி பிடித்துக்கொண்டு காட்டுக்குள் இழுத்துச்செல்ல முயன்றது. இதனால் மூதாட்டி உதவி கேட்டு கத்தினார்.
சத்தம் கேட்டு வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்த அவர் கணவர் காசிநாத் வெளியில் வந்து பார்த்தார். அப்போது சிறுத்தை தன் மனைவியை கடித்து இழுத்துச் செல்வதைக் கண்டு அதிர்ந்து போனவர், உடனடியாக வீட்டில் கிடந்த கம்பை எடுத்துச்சென்று சிறுத்தையை தாக்க ஆரம்பித்தார். காசிநாத் கம்பைக் கொண்டு தாக்கியதால் பயந்துபோன சிறுத்தை, மூதாட்டியை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது. அதையடுத்து, இருவரின் சத்தம் கேட்டு பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடி வந்தனர். மூதாட்டி நாசிக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். துணிச்சலுடன் 72 வயதிலும் சிறுத்தையுடன் போராடி மனைவியை மீட்ட முதியவரை பொதுமக்கள் பாராட்டினர். வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைத்துவிட்டு சென்றுள்ளனர். காசிநாத் வசிக்கும் கிராமம் வன விலங்குகள் சரணாலயத்துக்கு அருகில் இருப்பதால், அங்கிருந்து அடிக்கடி சிறுத்தைகள் கிராமத்துக்குள் வந்துவிடுகின்றன. எனவே பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டுக்கு வெளியில் உறங்கவேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பென்ஸ் கார் உற்பத்தியை நிறுத்திய சிறுத்தை!
இதேபோல, புனேவில் மெர்சிடிஸ் பென்ஸ் கார் உற்பத்தி தொழிற்சாலைக்குள் சிறுத்தை ஒன்று புகுந்ததால், 4 மணி நேரம் உற்பத்தி பாதிக்கப்பட்டது. புனே சகான் பகுதியில் மெர்சிடிஸ் பென்ஸ் கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இருக்கிறது. இந்த தொழிற்சாலைக்குள் இரவில் சிறுத்தை ஒன்று புகுந்துவிட்டது. காலையில் ஒரு ஷிஃப்ட் முடிந்து, மறு ஷிஃப்ட்டுக்கு தொழிலாளர்கள் வந்தபோது, சிறுத்தை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கார் உற்பத்தியும் உடனே நிறுத்தப்பட்டது. வனத்துறை அதிகாரிகளும், வனவிலங்குகள் பாதுகாப்பு தொண்டு நிறுவன பிரதிநிதிகளும் நான்கு மணி நேரம் போராடி சிறுத்தையை பிடித்தனர். சிறுத்தைக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்டது. அதன் பிறகுதான் தொழிலாளர்கள் பணியைத் தொடங்கினர். இந்தச் சம்பவத்தால் தொழிற்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. சிறுத்தையால் அன்று முழுவதும் கார் உற்பத்தி நடைபெறவில்லை என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ``நமது கம்பெனிக்கு காலையில் சிறப்பு விருந்தினர் ஒருவர் வந்திருந்தார். சிறுத்தை ஒன்று புகுந்துவிட்டது. வனத்துறை அதிகாரிகளின் துணையோடு சிறுத்தை பிடிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து தொழிலாளர்களும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வனத்துறையினர் தொழிற்சாலை முழுக்க தேடிய பிறகு வேறு சிறுத்தை இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு சென்றனர்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது
from தேசிய செய்திகள் https://ift.tt/Rl6FkbZ
0 Comments